செய்திகள்

உ.பி.யில் தலித் பெண்ணை கூட்டாக கற்பழித்து நிர்வாண ஊர்வலம் - 4 வாலிபர்கள் கைது

Published On 2018-07-04 05:28 GMT   |   Update On 2018-07-04 05:28 GMT
உத்தரப்பிரதேசத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த பெண்ணை கற்பழித்து நிர்வாணமாக்கி தெருவில் ஊர்வலமாக அழைத்து சென்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் ஹாமிர்பூர் மாவட்டம் குராரா என்ற ஊரில் தலித் சமூகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் உயர் ஜாதி பெண்ணை காதலித்து வந்தார்.

இதனால் உயர் ஜாதி சமூகத்தை சேர்ந்தவர்கள் அந்த வாலிபரை எச்சரித்தனர். ஆனால், அதை கண்டுகொள்ளாத அவர் உயர் ஜாதி பெண்ணை தொடர்ந்து காதலித்து வந்தார்.

இதற்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று உயர் ஜாதியினர் முடிவு செய்தனர். சம்பவத்தன்று உயர் ஜாதியை சேர்ந்த 4 பேர் அந்த வாலிபரின் உறவு பெண்ணின் வீட்டுக்கு வந்தனர். தனியாக இருந்த அவரை 4 பேரும் கூட்டாக கற்பழித்தனர்.

இந்த வி‌ஷயத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவோம என மிரட்டிவிட்டு சென்றனர். ஆனால், நடந்த சம்பவத்தை கணவரிடமும், உறவினரிடமும் அந்த பெண் கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் உயர் ஜாதியினரிடம் சென்று சண்டை போட்டார். இதனால் அவர்களுக்கு மேலும் ஆத்திரம் ஏற்பட்டது.

ஏற்கனவே கற்பழிப்பில் ஈடுபட்ட 4 பேரும் மறுபடியும் அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்தனர். நடந்த வி‌ஷயத்தை எப்படி வெளியே சொல்லலாம்? என்று கூறி அவரை அடித்து உதைத்தனர்.

பின்னர் அந்த பெண்ணை வீட்டுக்கு வெளியே இழுத்து வந்தனர். அவரை நிர்வாணமாக்கி தெருவில் ஊர்வலமாக அழைத்து சென்றனர். அந்த காட்சியை ஊரே நின்று வேடிக்கை பார்த்தது. யாரும் அவரை காப்பாற்ற முன்வரவில்லை.

இது சம்பந்தமாக பெண்ணின் கணவர் குராரா போலீசுக்கு தகவல் கொடுத்தார். ஆனால், அவர்களும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உள்ளூர் பிரமுகர்கள் சிலர் போலீசாரை அங்கு வரவிடாமல் தடுத்துவிட்டனர். இதனால் அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஜய்குமாரிடம் சென்று புகார் கொடுத்தார்.

அதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த பெண்ணை கோரி லால், சோட்டாலால், ஜெய்கிஷோர், ஹாகன் ஆகிய வாலிபர்கள் கற்பழித்தது தெரிய வந்தது. அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சம்பவம் நடந்ததும் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் குராரா போலீசார் மீது துறை ரீதியான விசாரணைக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.

இது சம்பந்தமாக சமாஜ்வாடி கட்சி செய்தி தொடர்பாளர் சுனில்சிங் கூறும் போது, உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதா ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.

பா.ஜ.க. ஆட்சி வந்த பிறகு தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது என்று கூறினார்.
Tags:    

Similar News