செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் - காங்கிரஸ் கவுன்சிலர்களை பா.ஜ.க. இழுக்க முயற்சி

Published On 2018-06-19 06:16 GMT   |   Update On 2018-06-19 06:16 GMT
குஜராத் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் காங்கிரஸ் கவுன்சிலர்களை தங்கள் பக்கம் இழுத்து தலைவர் பதவியை கைப்பற்ற பாரதிய ஜனதா முயற்சித்து வருகிறது. #GujaratLocalElections #CongressCouncilors

அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் 2015-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில், பல நகராட்சிகள் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து, தாலுகா பஞ்சாயத்து போன்றவற்றில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கணிசமான இடங்களை பிடித்தது.

குஜராத்தில் 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ளாட்சி தலைவர் பதவிகளை மாற்றி அமைக்கும் நடைமுறை உள்ளது.

இவ்வாறு மாற்றி அமைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் ஓட்டு போட்டு தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்ந்து எடுப்பர்.

சமீபத்தில் நகராட்சிகளில் இதுபோல் தலைவர் தேர்தல் நடந்த போது, பல காங்கிரஸ் கவுன்சிலர்களை பாரதிய ஜனதா தங்கள் பக்கம் இழுத்தது.

இதனால் காங்கிரஸ் கட்சி அம்ரலி, பாப்ரா, பகாசரா, பதான் ஆகிய நகராட்சி தலைவர் பதவிகளை இழந்தது.

தற்போது மாவட்ட பஞ்சாயத்து மற்றும் தாலுகா பஞ்சாயத்து தலைவர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

 


இந்த தேர்தலிலும் காங்கிரஸ் கவுன்சிலர்களை தங்கள் பக்கம் இழுத்து தலைவர் பதவியை கைப்பற்ற பாரதிய ஜனதா முயற்சித்து வருகிறது.

பாரதிய ஜனதா வலையில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் சிக்கி விடாமல் தடுக்க அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று காங்கிரஸ் தலைவர்கள் பாதுகாத்து வருகிறார்கள்.

பெரும்பாலானோர் அருகில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளனர். மற்றும் பலர் யூனியன் பிரதேசமான டாமன் டையூக்கு அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை மேலிட தலைவர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

பொதுவாக சட்டசபை தேர்தலில்தான் எம்.எல்.ஏ.க்களை மாற்று கட்சிகள் இழுத்து விடாமல் தடுக்க இதுபோன்று ஆட்களை பாதுகாப்பது வழக்கமாக இருந்தது.

குஜராத்தில் உள்ளாட்சி தேர்தலிலும் தங்கள் கட்சியினரை தக்க வைப்பதற்கு காங்கிரசார் பாதுகாப்பாக வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. #GujaratLocalElections #CongressCouncilors

Tags:    

Similar News