செய்திகள்

கடந்த 4 ஆண்டுகால பிரதமர் மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி - சிவசேனா கடும் விமர்சனம்

Published On 2018-06-16 21:42 GMT   |   Update On 2018-06-16 21:42 GMT
கடந்த 4 ஆண்டுகளாக பிரதமர் மோடி மேற்கொண்ட சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி அடைந்து இருப்பதாக சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது. #Modi #ShivSena
மும்பை:

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் காஷ்மீர் நிலவரம் குறித்து கடந்த 14-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்று இருந்தன.

ஆனால் ஐ.நா.வின் அறிக்கை உள்நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டிய மத்திய அரசு இதனை புறக்கணித்தது. இந்த நிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் இது குறித்து கூறியிருப்பதாவது:-



இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு நகைப்புக்குள்ளாகி இருக்கிறது. ரம்ஜான் காலத்தில் காஷ்மீரில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களுக்கு மத்திய அரசை தான் குற்றம்சாட்ட வேண்டும். கடந்த 4 மாதங்களில் மட்டும் காஷ்மீரில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர். அதில் பெரும்பாலானோர் நமது ராணுவ வீரர்கள்.

நாட்டின் ராணுவ மந்திரி உட்கட்சி விவகாரங்களில் பரபரப்பாக இருக்கும் நிலையில் பிரதமர் மோடியோ வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பிரதமரின் கடந்த 4 ஆண்டுகால வெளிநாட்டு பயணங்களால் சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு அதிகரித்து இருப்பதாக கூறப்படும் கருத்து காஷ்மீர் குறித்த தற்போதைய ஐ.நா. அறிக்கையை தொடர்ந்து தவிடுபொடியாகி விட்டது.

பிரதமர் மோடி எண்ணற்ற வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்ட போதிலும், காஷ்மீர் விவகாரத்தில் யாரும் இந்தியாவின் பக்கம் நிற்க தயாராக இல்லை. இவை பிரதமர் மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி அடைந்து இருப்பதையே காட்டுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.   #Modi #ShivSena  #tamilnews
Tags:    

Similar News