செய்திகள்

வன்முறைக்கு முடிவு கட்ட வளர்ச்சிதான் ஒரே வழி - பிரதமர் மோடி உறுதி

Published On 2018-06-14 22:09 GMT   |   Update On 2018-06-14 22:09 GMT
வன்முறைக்கு முடிவு கட்ட வளர்ச்சிதான் ஒரே வழி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். #NarendraModi
பிலாய்:

பிரதமர் நரேந்திர மோடி நேற்று சத்தீஷ்கார் மாநிலம் பிலாய்க்கு சென்றார். அங்கு ரூ.22 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கிவைத்தார்.

இவற்றில், பிலாய் உருக்கு ஆலை விரிவாக்கம், ஐ.ஐ.டி.க்கு அடிக்கல் நாட்டுதல், ஜக்தால்பூர்-ரெய்ப்பூர் இடையிலான புதிய விமான போக்குவரத்து ஆகியவையும் அடங்கும்.

இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது:-

சத்தீஷ்கார் மாநிலம், முன்பு காடுகளும், பழங்குடியினரும் நிறைந்த மாநிலமாக அறியப்பட்டது. இப்போது, ஸ்மார்ட் சிட்டியாக மாறி இருக்கிறது. பாதை மாறிச்சென்ற இளைஞர்கள், தேசிய நீரோட்டத்தில் இணைந்து வளர்ச்சிக்கு அரும்பணி ஆற்றி வருகிறார்கள். எந்த வடிவிலான வன்முறைக்கும், சதிக்கும் முடிவு கட்ட வளர்ச்சிதான் ஒரே வழி.

அதனால்தான், எங்கள் அரசு வளர்ச்சி மூலமாக நம்பிக்கையான சூழ்நிலையை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. வளர்ச்சிக்கு அமைதி, சட்டம்-ஒழுங்கு, அடிப்படை வசதிகள் ஆகியவை முக்கியம்.

சத்தீஷ்காரில் கிடைக்கும் இரும்புத்தாது, இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கனிமங்கள் மீது இம்மாநில மக்களுக்குத்தான் உரிமை உள்ளது.

முந்தைய காங்கிரஸ் அரசு, பல இடங்களில் சாலை கூட போடவில்லை. ஆனால், அந்த இடங்களில் எங்கள் அரசு விமான நிலையங்களையே கட்டி உள்ளது. ‘ஹவாய்’ செருப்பு அணிந்தவர் கூட விமானத்தில் பறப்பதை பார்ப்பதுதான் எனது கனவு.

அதற்காக, சிறு நகரங்களை விமான போக்குவரத்து மூலம் இணைக்கும் ‘உடான்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, மக்கள் ரெயில்களின் ஏ.சி. பெட்டிகளில் பயணிப்பதை விட விமானங்களில் பயணிப்பதையே விரும்புகிறார்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.  #NarendraModi
Tags:    

Similar News