செய்திகள்

எதிர்க்கட்சிகள் இல்லாமல் ஜனநாயகம் இல்லை - அமித் ஷா

Published On 2018-06-11 09:58 GMT   |   Update On 2018-06-11 09:58 GMT
நாட்டில் ஜனநாயகம் தழைக்க, எதிர்க்கட்சிகள் தான் முக்கிய பங்காற்றுகின்றன என பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா இன்று தெரிவித்துள்ளார். #AmitShah
ராய்பூர் :

சத்தீஸ்கர் மாநிலம், சர்குஜா மாவட்டத்தில் உள்ள அம்பிகாபூரில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது :-

‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ எனும் பா.ஜ.க.வின் பிரச்சார முழக்கத்திற்கான அர்த்தம் இந்தியாவில் இருந்து காங்கிரஸ் கட்சியை முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டும் என்பது இல்லை. மாறாக, காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரம் மற்றும் கொள்கைகள் இல்லாத இந்தியா என்பது தான் அதன் பொருள். 

எதிர்க்கட்சிகள் இல்லாமல் ஜனநாயகம் சாத்தியம் இல்லை. நாட்டில் ஜனநாயகம் தழைக்க எதிர்க்கட்சிகள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சரிந்து வருவது வேறு விஷயம்.  மக்களிடத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது என் கடமை அல்ல, அது ராகுல் காந்தியின் பொறுப்பாகும். 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளிநாடுகளுக்கு பயணம் செய்த போது கிடைத்த மரியாதைகள், வரவேற்புகளை விட,  பிரதமர் மோடியின் தற்போதைய வெளிநாட்டு பயணங்களில் அதிகளவிலான மரியாதைகளும், வரவேற்புகளும் கிடைக்கின்றன. 

நடுத்தர மக்களுக்காக பா.ஜ.க அரசு ஒன்றுமே செய்யவில்லை என ராகுல் கூறுகிறார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, அனைத்து தரப்பு மக்களையும் கருத்தில் கொண்டு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அதன் காரணமாகவே நடுத்தர மக்களின் ஆதரவுடன் 14 மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியில் உள்ளது. எனவே, மக்களுக்காக நாங்கள் உழைத்தால் மக்கள் மீண்டும் எங்களை ஆதரிப்பார்கள். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். #AmitShah 
Tags:    

Similar News