செய்திகள்

பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் அல்லாத எதிர்அணி அமைய சாத்தியம் இல்லை - தேவேகவுடா

Published On 2018-05-22 07:24 GMT   |   Update On 2018-05-22 07:24 GMT
பாரதிய ஜனதாவை எதிர்க்க காங்கிரஸ் அல்லாத எதிர்அணி அமைய சாத்தியம் இல்லை என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறியுள்ளார். #Karnatakaassemblyelection #DeveGowda #BJP

பெங்களூரு:

கர்நாடகாவில் மதச்சார் பற்ற ஜனதா தளமும், காங்கிரசும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கின்றன. குமரசாமி நாளை முதல்-மந்திரியாக பதவி ஏற்கிறார்.

இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு பாரதிய ஜனதாவுக்கு எதிராக உள்ள அனைத்து கட்சிகளுக்கும் மதச்சார்பற்ற ஜனதாதளம் அழைப்பு விடுத்துள்ளது.

பாரதிய ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக பார்க்கப் படுகிறது.

இது சம்பந்தமாக மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி: பதவி ஏற்பு விழாவிற்கு பாரதிய ஜனதாவுக்கு எதிரான அனைத்து கட்சிகளையும் அழைத்திருக்கிறீர்கள். குறிப்பாக பிராந்திய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்?

பதில்: நாங்கள் விடுத்த அழைப்புக்கு பல்வேறு வகையில் விளக்கங்கள் வரலாம். நாங்கள் பாரதிய ஜனதாவுக்கு எதிரான அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து இருக்கிறோம்.

இதில் சில கட்சிகள் காங்கிரசை கூட எதிர்க்கின்றன. எங்களுடைய பொது திட்டம் என்பது 2019 பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வெளியேற்ற வேண்டும் என்பதாகும். எனவே அவர்கள் அனைவரையும் ஒரே அணியில் திரட்ட வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

இது சாதாரண வி‌ஷயம் அல்ல. நாங்கள் ஒன்று சேர்வதன் மூலம் பாரதிய ஜனதாவுக்கு எதிரான சக்திகள் அனைத்தும் ஒரே அணியில் இருப்பதற்கான தகவலை தெரிவிக்கும்.


கே: பாரதிய ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

ப: தற்போது நாங்கள் கர்நாடகாவில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளோம். பாரதிய ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத அணி அமைவது சாத்தியம் இல்லை. காங்கிரஸ் இந்த அணியில் இருப்பதுதான் ஒரே வழி.

காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றால் அவர்கள் பல கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை இந்த விவகாரங்களில் வேறு எதிலும் தலையிட விரும்ப வில்லை.

கே: காங்கிரஸ் உங்கள் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. இது எப்படி நடந்தது?

ப: தேர்தலின் போது காங்கிரஸ் என்னை கடுமையாக தாக்கியது. அதில் நான் வேதனை அடைந்தேன். தேர்தல் முடிவு வந்ததும் நாங்கள் எதிர்க்கட்சியாக இருப்பதற்கு தயாரானோம். அதே நேரத்தில் கடந்த ஒரு ஆண்டில் எனக்கும், எனது கட்சிக்கும் ஏற்பட்ட அவமதிப்புகளை மறந்து விட்டு நாட்டு நலனுக்காக ஒன்று சேர்ந்திருக்கிறோம்.

கே: கர்நாடக அரசியல் நாடகம் குறித்தும் சனிக் கிழமை சட்டசபை நிகழ்வுகள் குறித்தும் என்ன நினைக்கிறீர்கள்?

ப: இந்த வி‌ஷயத்தை பொருத்தவரை நீதி அமைப்புக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு ஜனநாயகத்தை காப்பாற்றி குதிரை பேரத்தை தடுத்து இருக்கிறது. இதன் மூலம் மக்களுக்கு நீதிமன்றம் மீது நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. நள்ளிரவில் விசாரணை நடத்தி தீர்வு கண்டது நீதி அமைப்பின் வலுவை காட்டுகிறது.

கே: காங்கிரஸ் - மதச்சார் பற்ற ஜனதாதளம் கூட்டணி நீண்ட காலம் நீடிக்கும் என்று நம்புகிறீர்களா?

ப: பழைய காயங்களை இப்போது பார்ப்பது தேவையற்றது. நனோ, குமாரசாமியோ இதற்கு முந்தைய தவறுகளை இப்போது செய்யமாட்டோம். மதசார்பற்ற தன்மையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும், நாட்டின் நலனுக்காகவும் நாங்கள் செயல்படுவோம்.

இவ்வாறு அவர் கூறினார். #Karnatakaassemblyelection #DeveGowda #BJP

Tags:    

Similar News