செய்திகள்

நோபல் பரிசை நிராகரித்தாரா தாகூர்? - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய திரிபுரா முதல்வர்

Published On 2018-05-11 14:25 GMT   |   Update On 2018-05-11 14:25 GMT
சர்ச்சைக்குரிய கருத்துகள் கூறி சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான பிப்லப் குமார் தேப், தற்போது ரவீந்திரநாத் தாகூர் குறித்து பேசி மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளார். #BiplapKumarDeb
அகர்தலா:

சமீபகாலங்களில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் அமைச்சர்கள் மற்றும் முதல்வர்களின் பேச்சுகளும், செயல்பாடுகளும் சிரிக்கவைப்பதாகவும், ஏன் இவர்களுக்கு வாக்களித்தோம்? என சிந்திக்க வைப்பதாகவும் அமைகிறது. அந்த வகையில் தனக்கான இடத்தை தக்கவைத்து வருபவர் திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப்.

பாஜகவைச் சேர்ந்த இவரது பிரசித்தி பெற்ற பேச்சுகளில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்கள் சிவில் சர்வீஸ் பணிகளை தேர்வு செய்யக்கூடாது, ராமாயண காலத்திலேயே இன்டர்நெட் வசதி, செயற்கைக் கோள் போன்றவை இருந்தது போன்றவையாகும்.

இந்நிலையில், தாகூரின் பிறந்தநாளை முன்னிட்டு, திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திரிபுரா முதல்வர் பிப்லப் தேப், பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது, தனக்கு அளிக்கப்பட்ட நோபல் பரிசை நிராகரித்தவர் ரவீந்திரநாத் தாகூர் என கூறியுள்ளார்.

முதல்வரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இதுதொடர்பாக பேசிய திரிபுராவின் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த கிஷோர் தேவ்புர்மான், முதல்வரின் இந்த கருத்து அதிருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

‘1919-ம் ஆண்டில் நடைபெற்ற ஜாலியன்வாலாபாக் போராட்டத்தின் போது, தாகூர் தனக்கு அளிக்கப்பட்ட வீரத்திருமகன் பட்டத்தை நிராகரித்ததாகவும், அதனால், எனது தாத்தா மன அமைதியின்றி இருந்ததாகவும் அவரது டைரியில் குறிப்பிட்டுள்ளார். முதல்வரின் இந்த கருத்து முட்டாள்தனமாக உள்ளது’ என்றும் தெரிவித்தார்.

மேலும், முதல்வரின் கருத்துக்கு திரிபுராவின் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், துணை தலைவர் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பிராஜித் சின்ஹா கூறுகையில், ’முதல்வரின் இதுபோன்ற கருத்துக்களால் வெட்கப்படவேண்டியிருக்கிறது’ என்றார்.
Tags:    

Similar News