செய்திகள்

செம்மரம் கடத்தியதாக ஆந்திராவில் 49 தமிழர்கள் கைது

Published On 2018-05-02 06:21 GMT   |   Update On 2018-05-02 06:23 GMT
திருப்பதி பாக்ராபேட்டை வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த 49 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருமலை:

திருப்பதி சேஷாச்சலவனம் உள்பட ஆந்திர வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் அதிகளவு நடக்கிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக 20 தமிழர்களை, ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றனர்.

கடந்த 3 மாதத்திற்கு முன்பு கடப்பா ஒட்டி மிட்டா வனப்பகுதி ஏரியில் 5 தமிழர்கள், மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். அவர்களை, ஆந்திர போலீசாரும், வனத்துறையினரும் அடித்துக் கொன்று ஏரியில் வீசியிருக்கலாம் என்று மனித உரிமை அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

ஆனாலும் செம்மரம் கடத்த வருவதாக தமிழர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடந்து கொண்டு தான் வருகிறது.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், சின்னசவுக் எல்லைக்கு உட்பட்ட வாட்டர் கண்டி என்ற இடத்தில் செம்மரம் வெட்டி கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் சப்-இன்ஸ்பெக்டர்கள் பத்மநாபன், மோகன், ஹேமந்த் குமார் ஆகியோர் அப்பகுதியில் சோதனை செய்தனர்.

அப்போது அங்கு ஒரு கும்பல் செம்மரக் கட்டைகளை கடத்துவதற்காக தயாராக இருந்தனர். இதை பார்த்த போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து 14 பேரை கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த வீரப்பனூரை சேர்ந்த முரளி, சிவாஜி, குப்பன், வீரா, செல்வம் கலசப்பாக்கத்தை சேர்ந்த தாமு, மகேந்திரன், குமார், போளூரை சேர்ந்த வெள்ளையன், அவரது மகன் சத்தியகுமார், செல்வம், நடராஜன், ரஜினி அரூர் கல்நாடு கிராமத்தை சேர்ந்த காந்தி என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அங்கிருந்த 366 கிலோ எடை கொண்ட 12 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாக்ராபேட்டை வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த 34 பேரை மடக்கி பிடித்தனர்.

அவர்கள் செம்மரம் கடத்த வந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை, சேலம், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களை தற்போது போலீசார் எங்கு வைத்துள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை.

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே கடந்த 29-ந் தேதி திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் செம்மரம் கடத்த வந்ததாக கூறி 15 பேரை கைது செய்தனர். இவர்கள் திருப்பதி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இதனையடுத்து அவர்கள் 15 பேரும் திருப்பதி தாசில்தார் சந்திரமோகன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர், செம்மரம் வெட்ட வரக்கூடாது என்று கூறி, அவர்களை விடுவித்தார்.

செம்மரம் வெட்ட வந்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
Tags:    

Similar News