செய்திகள்

முழு அடைப்பு போராட்டம்: காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை முடங்கியது

Published On 2018-05-02 00:23 GMT   |   Update On 2018-05-02 00:23 GMT
காஷ்மீரில் பிரிவினைவாத அமைப்புகள் மாநிலம் முழுவதும் நடத்திய முழு அடைப்பு போராட்டத்தால் காஷ்மீரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முடங்கியது.
ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ராணுவவீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் இந்த சம்பவத்தின் போது, ராணுவவீரர்கள் மீது கல்வீச்சில் ஈடுபட்ட பொதுமக்களில் ஒருவர் உயிர் இழந்தார்.

பயங்கரவாதிகள் மற்றும் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் பிரிவினைவாத அமைப்புகள் மாநிலம் முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன.

அதன்படி தலைநகர் ஸ்ரீநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டன. அரசு அலுவலகங்கள், வங்கிகளின் சேவைகள் முடங்கின. வாகனங்கள் செல்லாததால் சாலைகள் வெறிச்சோடின.

அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக புல்வாமா, குல்காம் உள்ளிட்ட இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. பதற்றமான இடங்களில் ராணுவவீரர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் சில பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டு இருந்தது.

முழு அடைப்பு போராட்டம் காரணமாக காஷ்மீர் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. 
Tags:    

Similar News