செய்திகள்

திருப்பதியில் தேதி, நேரம் குறிப்பிட்ட தரிசன அட்டை திட்டம் தாமதம்

Published On 2018-04-26 11:26 GMT   |   Update On 2018-04-26 11:26 GMT
கோடை விடுமுறை தொடங்கியும் திருப்பதியில் தேதி, நேரம் குறிப்பிட்ட தரிசன அட்டை திட்டம் தொடங்குவதில் தாமதம் எற்பட்டுள்ளது. #TirupatiTemple
திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்தில் வழிபட வரும் சாதாரண பக்தர்கள் சுலபமாக சாமி தரிசனம் செய்ய தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை (டைம் ஸ்லாட்) வழங்கப்பட உள்ளது. டைம் ஸ்லாட் முறையிலான தரிசன அனுமதி அட்டை மார்ச் மாதம் வழங்கப்படும் என்றும், பின்னர் இந்த மாதம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் திட்டம் தொடங்கப்படாமல் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

டைம் ஸ்லாட் முறையிலான தரிசன அனுமதி அட்டையை பெற வரும் அனைத்துத் தரப்பு பக்தர்களும் தங்களின் ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் ஒன்றை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.

இரு அட்டைகளும் இல்லை என்றால் பக்தரின் கண் கருவிழிப்படலம் மூலம் டைம் ஸ்லாட் முறையிலான தரிசன அனுமதி அட்டையை வழங்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்கும் பணி இந்த வாரம் அமலுக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு முறை டைம் ஸ்லாட் அனுமதி அட்டையை பெற்ற ஒரு பக்தர் 24 மணிநேரத்தில் இருந்து 48 மணி நேரத்துக்குள் மீண்டும் ‘டைம் ஸ்லாட்’ தரிசன அனுமதி அட்டையை பெற முடியாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதற்காக கம்ப்யூட்டரில் புதிய மென் பொருள் பொருத்தப்பட்டு உள்ளது. இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் ஆதார் அட்டையோ அல்லது வாக்காளர் அடையாள அட்டையோ இல்லை என்றால் கவலைப்பட தேவையில்லை.

திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் தங்கி ஓய்வெடுத்து, வழக்கம்போல் இலவச தரிசனத்தில் செல்லலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் அட்டையை பயன்படுத்த கட்டாயமில்லை என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. அதன் அடிப்படையில் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை என தீர்ப்பு வெளி வந்தால் வாக்காளர் அடையாள அட்டையை தரிசன நடைமுறைக்குப் பயன்படுத்தலாம் என அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மேலும் அலிபிரி நடைபாதையில் பாத யாத்திரையாக வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு தினமும் 14 ஆயிரம் அனுமதி சீட்டும், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு 6 ஆயிரம் அனுமதி சீட்டும் என மொத்தம் 20 ஆயிரம் பேருக்கு திவ்ய தரிசன அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இரு நடைபாதைகளில் திவ்ய தரிசன அனுமதி சீட்டு கொடுத்து முடிந்ததும், அதைத்தொடர்ந்து இலவச தரிசனத்தில் செல்ல விரும்பும் பக்தர்களுக்கு டைம் ஸ்லாட் முறையில் தரிசன அனுமதி அட்டை வழங்கப்பட உள்ளது. அதற்காக அலிபிரி நடைபாதையில் காளிகோபுரத்தில் 10 கவுண்ட்டர்களும், ஸ்ரீவாரிமெட்டு நடைபாதையில் 4 கவுண்ட்டர்களும் அமைக்கப்பட உள்ளது.

கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதியில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் டைம் ஸ்லாட் முறையை நடைமுறைப்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். அதிகாரிகள் தெரிவித்துள்ள படி இந்த வாரமாவது டைம் ஸ்லாட் திட்டத்தை அமல்படுத்தப்பட வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். #Tamilnews
Tags:    

Similar News