செய்திகள்

ஆசாராம் பாபு கற்பழிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு - டெல்லியில் பலத்த பாதுகாப்பு

Published On 2018-04-24 23:46 GMT   |   Update On 2018-04-24 23:46 GMT
ஆன்மிகவாதி ஆசாராம் பாபு மீதான கற்பழிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் நிலையில், டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். #AsaramCaseVerdict
புதுடெல்லி:

ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வந்தவர் ஆசாராம் பாபு (75). இவரது ஆசிரமத்தில் தங்கி படித்த உ.பி. ஷாஜஹான்பூர் பகுதியை சேர்ந்த சிறுமி, ஆசாராம் பாபு தன்னை கற்பழித்து விட்டதாக போலீசில் புகார் அளித்திருந்தார். இதேபோல் பல்வேறு பலாத்கார வழக்குகள் இவர் மீது குவிந்தன.

இதையடுத்து, கற்பழிப்பு மற்றும் சிறுமிகள் பாலியல் பலாத்கார தடை சட்டத்தின்கீழ் ஆசாராம் பாபுவை கடந்த 31-8-2013 அன்று போலீசார் கைது செய்தனர். தற்போது ராஜஸ்தானின் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, ஷாஜஹான்பூர் சிறுமி வழக்கில் கடந்த நான்காண்டுகளாக ஜோத்பூர் நகரில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் அரசுதரப்பு மற்றும் எதிர்தரப்பு வாதங்கள் கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்றுவந்த நிலையில் ஏப்ரல் 25-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி மதுசூதன் சர்மா தெரிவித்திருந்தார். எனவே, ஷாஜஹான்பூர் பகுதியில் வசிக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆசாராம் பாபு அடைத்து வைக்கப்பட்டுள்ள ஜோத்பூர் சிறைக்கு நீதிபதி சென்று தீர்ப்பளிக்கப்படுவதால் சிறையை சுற்றியும், அருகில் உள்ள பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் ஆசாராம் பாபுவுக்கு ஏராளமான பக்தர்கள் இருப்பதால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
  
இதேபோல் ராஜஸ்தான், குஜராத், அரியானா மாநிலங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அந்தந்த மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #AsaramCaseVerdict #Tamilnews
Tags:    

Similar News