செய்திகள்

உன்னாவ் சம்பவம் - பாஜக எம்.எல்.ஏ.வின் காவல் மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு

Published On 2018-04-20 15:21 GMT   |   Update On 2018-04-20 15:21 GMT
உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காரின் போலீஸ் காவல் மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 17-ம் தேதி தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக இளம்பெண் ஒருவர் 20-6-2017 அன்று போலீசில் புகாரளித்திருந்தார்.

இதனையடுத்து, அந்த புகாரை வாபஸ் பெறும்படி எம்.எல்.ஏ.வின் அடியாட்கள் அப்பெண்ணின் தந்தையை தாக்கியதாக மற்றொரு புகார் அளிக்கப்பட்டது.

மேற்கண்ட புகார்களின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில், அந்த பெண் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வீட்டின் முன் இம்மாத தொடக்கத்தில் தீக்குளிக்க முயன்றார். இதற்கிடையே, பழைய வழக்கு ஒன்றில் கடந்த 5-ம் தேதி திடீரென அப்பெண்ணின் தந்தை சுரேந்திரா சிங் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் கடந்த 11-ம் தேதி உயிரிழந்தார். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பல தரப்புகளிலும் இருந்து கண்டனம் எழுந்தது.

இதையடுத்து, இந்த வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. குல்தீப் சிங் செங்காரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். 7 நாட்கள் விசாரணைக் காவல் முடிந்த நிலையில், அவர் இன்று உன்னாவ் சிறார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மேலும் 7 நாட்கள் விசாரணைக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். #Unnao #TamilNews
Tags:    

Similar News