செய்திகள்

தவறான தகவல் அளித்தால் கடும் நடவடிக்கை- வருமான வரித்துறை எச்சரிக்கை

Published On 2018-04-19 05:31 GMT   |   Update On 2018-04-19 05:31 GMT
வருமானவரி கணக்கு செலுத்தும் போது தவறான தகவல்களை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி:

வருமானவரி கணக்கு செலுத்தும் போது தவறான தகவல்களை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்குகளை பெற்று செயலாற்றும் பெங்களூரில் உள்ள மத்திய செயலாக்க மையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வருமான வரி ஆதாயங்களை பெறுவதற்காக தவறான கணக்கை தாக்கல் செய்ய உதவும் நேர்மையற்ற வருமான வரி ஆலோசகர்களின் வலையில் மாத சம்பளம் பெறுபவர்கள் விழ வேண்டாம். வருமானத்தை குறைத்து காட்டுதல், பிடித்தம் செய்யப்பட்ட தொகையை அதிகரித்துக் காட்டுதல் உள்ளிட்ட தவறான செயல்களின் மூலமாக வருமான வரி ஏய்ப்பு செய்வது கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் வருமான வரிச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியதாகும்.

வருமான வரி தாக்கல் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் வருமானவரி சட்டத்தின் கீழ் தண்டனை அளிக்கப்படுவதுடன் தாக்கல் செய்யப்படும் கணக்குகளுக்கு திருப்பி அளிக்கப்படும் தொகையும் தாமதமாகும். அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் தவறான வருமான வரி தாக்கல் செய்யும் பட்சத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

முறைகேடுகளில் ஈடுபடுவோரை கண்டறியும் வகையில் விரிவான இடர் ஆய்வு அமைப்பின் மூலமாக வருமானவரி கணக்கு தாக்கல்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும். எனவே வருமானவரி ஆலோசகர்கள் வருமான வரி சட்டத்துக்கு உட்பட்டு வரி செலுத்துவோருக்கு தங்களது ஆலோசனையை வழங்க வேண்டும். மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் மத்திய புலனாய்வு அமைப்பு, அமலாக்க இயக்குனரகம் ஆகியவற்றிடமும் பரிந்துரைக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News