search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தவறான தகவல்"

    • பிராய்லர் கோழிகள் நமக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது.
    • இரு கோழிகளில் உள்ள ஊட்டச்சத்துக்கும் எந்தவிதமான வேறுபாடும் இல்லை.

    திருப்பூர்:

    பிராய்லர் கோழிகளில் உள்ள ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.பல்லடம் பிராய்லர் கோழி கமிட்டி மற்றும் -பண்ணை கோழி விவசாயிகள் ஒழுங்குமுறை அமைப்பு சார்பில், நடந்த இக்கருத்தரங்கில் நாமக்கல் கால்நடை தீவன பகுப்பாய்வகம், கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் நடராஜன் பேசியதாவது:-

    பிராய்லர் கோழிகள் நமக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது. கோழிகளின் இறைச்சி மற்றும் எடை அதிகரிப்புக்காக, ஊசி செலுத்துவது குறித்து ஒரு தவறான செய்தி பரவி வருகிறது. இதனை மக்கள் நம்ப வேண்டாம்.

    நமது குழந்தைகளுக்கு, அம்மை நோய் மற்றும் போலியோ போன்ற நோய்கள் வராமல் தடுக்க, முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி செலுத்துவது போல், இந்த வகை கோழிகளுக்கும் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படுகிறது.

    நாட்டுக்கோழிகளில் அதிக சத்து இருப்பதாகவும், பிராய்லர் கோழிகளில் சத்து இல்லை என்றும் மக்களிடம் நம்பிக்கை நிலவுகிறது. இரு கோழிகளில் உள்ள ஊட்டச்சத்துக்கும் எந்தவிதமான வேறுபாடும் இல்லை. நாட்டுக்கோழிகள் அதிக நாட்கள் வளரக்கூடியவை. இதனால் இதன் சுவை கூடுதலாக உள்ளது. சத்துக்களில் எந்த வித்தியாசமும் இல்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தவறான உள்ளடக்கங்கங்களை எதிர்த்துப் போராட தவறிய தளங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.
    • டிஜிட்டல் தளங்களை ஒழுங்குபடுத்தும் முயற்சிகளில் ஆஸ்திரேலியா முன்னணியில் உள்ளது.

    வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அவற்றில் பரவி வரும் செய்திகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாவதும், அதனால் சமூக பிரச்சனைகள் உருவாவதும் பல நாடுகளை தீவிரமாக சிந்திக்க வைத்துள்ளன.

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் ஒரு புதிய சட்டம் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது. தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கத் தவறும் தொழில்நுட்ப ஜாம்பவான்கள், பில்லியன் கணக்கான டாலர்களை அபராதமாக செலுத்த இந்த சட்டம் வகை செய்கிறது. பேஸ்புக், கூகுள், டுவிட்டர், மற்றும் டிக்டாக் ஆகிய சமூக வலைதளங்களுடன், பாட்காஸ்டிங் சேவைகள் அளிக்கும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் தவறு செய்யும்பட்சத்தில் தங்களது வருடாந்திர உலகளாவிய வருவாயில் 5% வரை அபராதத்தை எதிர்கொள்வார்கள். இது உலகிலேயே மிக அதிகமான அபராதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த சட்டத்தின்படி "ஆஸ்திரேலியன் கம்யூனிகேஷன்ஸ் அண்ட் மீடியா அத்தாரிட்டி" எனும் அரசின் கண்காணிப்பு அமைப்பிற்கு பல அதிகாரங்கள் கிடைக்கும். இதன்மூலம், சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கவும், அத்தகவல்கள் பணமாக்கப்படுவதை தடுக்கவும் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ அவற்றை செய்ய வைக்க, சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களை இந்த அமைப்பினால் நிர்ப்பந்திக்க முடியும்.

    கடுமையான தீங்குகளை விளைவிக்கக்கூடிய தவறான மற்றும் ஏமாற்றும் உள்ளடக்கங்கங்களை கண்காணிக்கவோ, எதிர்த்துப் போராடவோ தவறிய தளங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

    டிஜிட்டல் தளங்களை ஒழுங்குபடுத்தும் முயற்சிகளில் ஆஸ்திரேலியா முன்னணியில் உள்ளது.

    ஏற்கெனவே 2021ல் தவறான தகவல் மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்கள் ஆகியவற்றை தடுக்க அந்நாடு தன்னார்வ ஆஸ்திரேலிய நடைமுறைக் குறியீடு எனும் ஒரு செயல்பாட்டை கொண்டு வந்திருந்தாலும், அது குறைந்தளவே தாக்கத்தை ஏற்படுத்தியது.

    இப்பின்னணியில் முன்மொழியப்பட்டுள்ள இந்த மசோதா, இந்த செயல்பாட்டை வலுப்படுத்தும் ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது.

    அடோப், ஆப்பிள், ஃபேஸ்புக், கூகுள், மைக்ரோசாப்ட், ரெட் பபிள், டிக்டாக் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் தற்போதைய இந்த குறியீட்டில் கையொப்பமிட்டிருக்கிறார்கள்.

    இச்சட்டத்தின் மூலம் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல்களின் நம்பகத்தன்மை கூடுமா என்பதையும், இதே போன்ற சட்டங்களை பிற நாடுகளும் கொண்டு வருமா என்பதையும் வல்லுனர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

    • மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
    • மாவட்ட காவல்துறை சார்பில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து தவறாக சித்தரித்து வெளியிட்டு பிரச்சினை ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் கூறியதாவது:-

    வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியவர்கள் மீது திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. டுவிட்டர், முகநூல், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்கள் மீது இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 3 சமூக வலைதளங்களின் சட்டக்குழுவினருடன் ஆலோசனை நடத்தி, 3 பதிவுகளை அதில் இருந்து அகற்றுவதற்கு கோரிக்கை வைத்துள்ளோம்.

    டுவிட்டரில் ஏற்கனவே அந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது. மற்ற 2 பதிவுகளை அகற்றுவதற்கு அதிகாரிகளுடன் பேசி வருகிறோம். பணம் சம்பாதிக்கும் நோக்கில் சிலர் சமூக வலைதளங்களில் அதிகமானோர் பார்ப்பதற்காக சில வதந்திகளை பரப்பி வருகின்றனர். அவர்களுடைய வங்கி கணக்குகளை முடக்குவதற்கும் நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். இந்த பிரச்சினை தொடர்பாக 2 போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 தனிப்படை அமைத்துள்ளோம். வடமாநில தொழிலாளர்களுக்காக மாவட்ட காவல்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்ட காவல் கட்டுப்பாட்டு எண்ணிற்கு 600-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன.

    அதில் யாரும், யாரையும் தாக்கியது போன்ற அழைப்புகள் எதுவும் வரவில்லை. 70 சதவீத அழைப்புகள் பீகார், ஒடிசா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து வடமாநில தொழிலாளர்களின் உறவினர்களும், குடும்பத்தினரும் தொடர்பு கொண்டு திருப்பூரில் இதுபோன்று நடக்கிறதா என்று விளக்கம் கேட்கின்றனர்.

    அவர்களுக்கு இந்தி தெரிந்த போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் 24 மணி நேரமும் தகவல்களை வழங்கி வருகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×