செய்திகள்

கர்நாடக சட்டசபை தேர்தல் - வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

Published On 2018-04-17 08:20 GMT   |   Update On 2018-04-17 08:42 GMT
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கியது. முதல் நாளான இன்று அனைத்து தொகுதிகளிலும் ஒரு சில சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
பெங்களூரு:

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் 12-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

இதையொட்டி காங்கிரஸ், பா.ஜனதா, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. காங்கிரஸ், பா.ஜனதா கட்சி தலைவர்களும் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்று பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.

சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கியது. முதல் நாளான இன்று அனைத்து தொகுதிகளிலும் ஒரு சில சுயேட்சை வேட்பாளர்கள் தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக மாநிலம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்கள், தாலுகா மற்றும் மாநகராட்சி அலுவலங்களில் தேர்தல் அலுவலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

காங்கிரஸ், பா.ஜனதா, மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் இன்னும் ஓரிரு நாளில் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்பு மனு தாக்கலை யொட்டி தேர்தல் அலுவலகங்களை சுற்றிலும் 100 மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த தடை உத்தரவு வருகிற 24-ந்தேதி வரை அமலில் இருக்கும்.

தேர்தல் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. அத்துடன் மனு தாக்கல் செய்ய வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மனு தாக்கல் செய்ய முடியாது. வேட்பு மனு தாக்கல் வருகிற 24-ந்தேதி மாலை 3 மணியுடன் முடிவடைகிறது. மறுநாள் 25-ந்தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. மனுக்களை திரும்ப பெற 27-ந்தேதி கடைசி நாளாகும்.

ஆளும் காங்கிரஸ் கட்சி இதுவரை 218 வேட்பாளர்கள் பெயர்களையும், பா.ஜனதா 154 வேட்பாளர்கள், ம.ஜ.த. 126 வேட்பாளர்கள் பெயர்களையும் அறிவித்துள்ளன. 3 கட்சிகளும் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களுக்கே தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது.


Tags:    

Similar News