செய்திகள்

உயிரை துச்சமென மதித்து உயிர் துறந்த பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோரின் நினைவு தினம்

Published On 2018-03-23 04:33 GMT   |   Update On 2018-03-23 04:33 GMT
ஆங்கிலேயே ஏகாதியபத்திற்கு எதிராக உயிரை துச்சமென மதித்து தூக்குக்கயிற்றை முத்தமிட்ட பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோரின் 87 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. #ShaheedDiwas

பகத் சிங் இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார் (சாஹீது என்பது மாவீரர் எனப் பொருள்படும்). இவர் இந்தியாவின் முதலாவது மாக்சியவாதி எனவும் சில வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுவதுண்டு.

இந்தியாவின் பிரித்தானிய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் பிறந்த பகத் சிங் இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார். பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார்.

63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது. முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபத் ராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24-வது வயதில் 1931-ம் ஆண்டு இதே நாளில் தூக்கிலிடப்பட்டார். 

அவருடன் சேர்த்து சுக்தேவ், ராஜ்குரு ஆகிய இரு ஒப்பற்ற போராளிகளையும் ஆங்கிலேய அரசு தூக்கில் இட்டது. ஆனால், அவர்கள் விதைத்த கொள்கை மேலும் பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவும் சோசலிசக் கொள்கைகள் இந்தியாவில் பரவவும் வழிவகுத்தது. #ShaheedDiwas #BhagatSingh #Sukhdev #Rajguru #TamilNews
Tags:    

Similar News