search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பகத்சிங்"

    கோவை அரசு கலை கல்லூரியில் சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த நாள் நிகழ்ச்சி நடத்தியதற்காக கல்லூரியில் இருந்து ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார். #Malathi #BhagatSingh
    கோவை:

    கோவை அரசு கலை கல்லூரியில் எம்.ஏ. வரலாறு பிரிவில் முதலாமாண்டு படித்து வருபவர் மாணவி மாலதி.

    இவர் கடந்த 28-ந் தேதி சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த நாள் நிகழ்ச்சி நடத்தியதற்காக கல்லூரியில் இருந்து ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டுள்ளார்.

    பகத்சிங் பற்றி கல்லூரியில் அனைத்து பிரிவு மாணவ, மாணவிகளும் தெரிந்து கொள்ளும் வகையில் பிறந்த நாள் நிகழ்ச்சி நடத்துவதற்கு, கல்லூரி முதல்வரிடம் அனுமதி கேட்டேன். அதற்கு மறுப்பு தெரிவித்த முதல்வர் துறை தலைவர் அனுமதி பெற்று எனது துறையில் மட்டும் நடத்துமாறு கூறினார்.

    துறை தலைவர் விடுமுறையில் இருந்ததால் வகுப்பாசிரியரிடம் அனுமதி கேட்ட போது அவர் மறுத்துவிட்டு, இனிப்பு மட்டும் வழங்கி கொள் என கூறினார். பகத்சிங் பற்றி அனைத்து பிரிவு மாணவ, மாணவிகளுக்கும் தெரிய வேண்டும் என கருதி நான் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை திரட்டி நிகழ்ச்சி நடத்தினேன்.

    இதற்காக 1-ந் தேதி நான் சஸ்பெண்டு செய்யப்பட்டதாக ஆசிரியர் கூறினார். ஆனால் முறைப்படி எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. சஸ்பெண்ட் கடிதமும் தரவில்லை. இதுகுறித்து கேட்ட போது எனது வீட்டு முகவரிக்கு சஸ்பெண்டு உத்தரவு அனுப்பியிருப்பதாக கூறினார்கள். ஆனால் அதுவும் வரவில்லை.

    இதனால் 9-ந் தேதி நான் வகுப்புக்கு சென்றேன். அப்போது நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக கூறி முதல்வர் அலுவலகத்தில் இருந்து சஸ்பெண்ட் உத்தரவு நகலை எடுத்து வந்து காட்டினர்.

    அந்த உத்தரவில் 1-ந் தேதியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை அறிக்கை பெறும் வரை இடைநீக்கம் செய்யப்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது.

    நான் பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தில் பொறுப்பில் உள்ளேன். நான் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்தற்கான காரணம் இதுவரை எனக்கு முறைப்படி தெரிவிக்கவில்லை. விசாரணை குறித்தும் இதுவரை எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை. அதோடு உத்தரவு நகலை ரேஸ்கோர்ஸ் போலீசுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இது தவறானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவி மாலதி மீதான நடவடிக்கை குறித்து கல்லூரி முதல்வர் சித்ரா கூறியதாவது:-

    கல்லூரியில் தனிப்பட்ட மாணவி கூறியதற்காக அனைத்து பிரிவு மாணவர்களையும் அழைத்து நிகழ்ச்சி நடத்த முடியாது. அவ்வாறு செய்தால் ஒவ்வொரு பிரிவிலும் யாராவது நிகழ்ச்சி நடத்த வேண்டும் என கேட்பார்கள். எனவே தான் துறை தலைவர் அனுமதி பெற்று அந்த துறையில் மட்டும் நடத்துமாறு கூறினேன்.

    ஆனால் மாலதி அனுமதி பெறாமலேயே பிற மாணவ, மாணவிகளை அழைத்து கூட்டம் கூட்டி, பொது அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தி உள்ளார். இதனாலேயே அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    வருகிற 22-ந் தேதி ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடைபெற உள்ளது. அதனடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சஸ்பெண்ட் உத்தரவு நகல் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பப்படுவது வழக்கமான நடைமுறைதான்.

    இவ்வாறு அவர் கூறினார். #Malathi #BhagatSingh
    ×