செய்திகள்

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் நிறுவனம் ரூ.10 கோடி செலுத்த டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2018-03-20 00:34 GMT   |   Update On 2018-03-20 00:34 GMT
நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கை விசாரித்த நீதிபதிகள் சோனியா, ராகுலுக்கு சொந்தமான யங் இந்தியன் நிறுவனம் ரூ.10 கோடி செலுத்துமாறு நேற்று உத்தரவிட்டனர்.
புதுடெல்லி:

சுதந்திர போராட்ட காலத்தில் காங்கிரஸ் கட்சியின் பணத்தில் உதயமான அசோசியேட்டட் ஜர்னல் லிமிடெட் நிறுவனம் சார்பில் ஜவகர்லால் நேருவால் ‘நேஷனல் ஹெரால்டு‘ பத்திரிகை தொடங்கப்பட்டது. இந்த பத்திரிகை, 2008-ம் ஆண்டு, தனது பதிப்பை நிறுத்தி விட்டது.

பின்னர், 2010-ம் ஆண்டு, அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவருடைய மகன் ராகுல் காந்தி ஆகியோர் ரூ.50 லட்சம் முதலீட்டில் ‘யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட்‘ என்ற நிறுவனத்தை தொடங்கினர். அதில், இருவரும் தலா 38 சதவீத பங்குகளை வைத்துள்ளனர்.

இந்த நிறுவனம், நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட்டர் ஜர்னல் நிறுவனத்தின் பங்குகளை முழுமையாக வாங்கிவிட்டது. இதில், முறைகேடு நடந்திருப்பதாக பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கொடுத்த புகாரின் பேரில், வருமான வரித்துறை விசாரணை நடத்தியது. அதன் அடிப்படையில், சோனியா, ராகுலுக்கு சொந்தமான யங் இந்தியன் நிறுவனம் ரூ.249 கோடியே 15 லட்சம் வருமான வரி செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து யங் இந்தியன் நிறுவனம், டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இதை விசாரித்த நீதிபதிகள் ரவீந்திர பட், ஏ.கே.சாவ்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, ரூ.10 கோடி செலுத்துமாறு யங் இந்தியன் நிறுவனத்துக்கு நேற்று உத்தரவிட்டது. பாதிப்பணத்தை 31-ந் தேதிக்குள்ளும், மீதிப்பணத்தை அடுத்த மாதம் 15-ந் தேதிக் குள்ளும் செலுத்த வேண்டும் என்று கூறியது. ரூ.10 கோடியை செலுத்துவதை பொறுத்து, ரூ.249 கோடியை செலுத்த வருமான வரித்துறை வற்புறுத்தாது என்று நீதிபதிகள் கூறினர். 
Tags:    

Similar News