செய்திகள்

நேற்று ஒரே நாளில் திருப்பதியில் 2 ஆயிரம் ஜோடிகளுக்கு திருமணம்

Published On 2018-03-05 06:36 GMT   |   Update On 2018-03-05 06:36 GMT
திருப்பதியில் நேற்று ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இதனால் திருப்பதி முழுவதும் புதுமண தம்பதிகளாகவே மணக்கோலத்தில் தென்பட்டனர்.
திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக புகழ் பெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும், திருப்பதி வந்து சாமியை தரிசித்துவிட்டு செல்கின்றனர். திருப்பதியில் திருமணம் செய்து கொள்வதை மக்கள் பாக்கியமாக நினைக்கின்றனர்.

இதனால் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் மட்டுமின்றி வடமாநிலங்களை சேர்ந்த பொதுமக்களும் திருப்பதிக்கு வந்து திருமணம் செய்து கொள்கின்றனர்.

நாட்டில் உள்ள முக்கிய பிரமுகர்களும், நடிகர்-நடிகைகளும் கூட திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளவே ஆர்வம் காட்டுகின்றனர். சமீபத்தில் நடிகை நமீதாவும், நீண்ட நாள் காதலனை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார்.

திருப்பதியில் திருமணம் செய்ய தேவஸ்தானம் ‘‘கல்யாண வேதிகையை’’ ஏற்பாடு செய்துள்ளது. இங்கு திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்கள் தேவஸ்தான இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

அதை தவிர்த்து திருப்பதியில் உள்ள பல தனியார் மடங்களிலும் திருமணங்கள் நடந்து வருகின்றன. இலவச திருமணங்கள் முதல் ரூ.15 லட்சம் வரை செலவிட்டு திருமணங்கள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில் நேற்று சுப முகூர்த்த தினத்தை முன்னிட்டு ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் ஜோடிகளுக்கு திருமணங்கள் நடந்துள்ளது. இதனால் திருப்பதி முழுவதும் புதுமண தம்பதிகளாகவே மணக்கோலத்தில் தென்பட்டனர். #tamilnews
Tags:    

Similar News