செய்திகள்
கொலை செய்யப்பட்ட பாதிரியார் சேவியர், கொலையாளி ஜோனி

கேரளாவில் பாதிரியார் குத்திக்கொலை- பணி நீக்கம் செய்யப்பட்டவர் ஆத்திரம்

Published On 2018-03-02 07:18 GMT   |   Update On 2018-03-02 07:18 GMT
கேரளாவில் பணிநீக்கம் செய்யப்பட்டவரால் பாதிரியார் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ளது மலையாற்றூர். இங்குள்ள மலையின் மீது கிறிஸ்தவ ஆலயம் ஒன்று உள்ளது. மிகவும் பழமையான இந்த ஆலய வளாகத்தில் குருசடியும் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தில் சேவியர் (வயது 52) என்பவர் பாதிரியாராக பணியாற்றி வந்தார். நேற்று ஆலயம் அருகே உள்ள குருசடி முன்பு பாதிரியார் சேவியர் நின்று கொண்டிருந்தார். அவரிடம் ஆலயத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் சிலரும் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஜோனி என்பவர் அங்கு வந்தார். அவர், பாதிரியாரிடம் திடீரென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அவரை பாதிரியார் சேவியர் சமாதானம் செய்ய முயன்றார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத ஜோனி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாதிரியாரை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இதைப்பார்த்ததும், அங்கு இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் பாதிரியாரை உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர், பரிதாபமாக இறந்து விட்டார்.

பாதிரியார் குத்தி கொல்லப்பட்டது பற்றி மலையாற்றூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது பாதிரியார் சேவியரிடம் ஜோனி உதவியாளராக பணியாற்றி உள்ளார்.

அவர் மீது பல்வேறு புகார்கள் வந்ததை தொடர்ந்து அவரை சேவியார் பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார். இதில், ஏற்பட்ட ஆத்திரத்தில் ஜோனி பாதிரியார் சேவியரை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரிய வந்தது. தலைமறைவாக உள்ள அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். #Tamilnews
Tags:    

Similar News