செய்திகள்

விந்தியகிரி மலைக்கு புதிய படிக்கட்டுகள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

Published On 2018-02-20 02:53 GMT   |   Update On 2018-02-20 02:53 GMT
சரவணபெலகோலாவில் 57 அடி உயர பாகுபலி சிலை அமைந்துள்ள விந்தியகிரி மலைக்கு புதிய படிக்கட்டுகளையும், பொது மருத்துவமனையையும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
சிக்கமகளூரு:

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா சரவணபெலகோலாவில் உலகப்புகழ்பெற்ற கோமதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒரேகல்லில் செதுக்கப்பட்ட 57 அடி உயர கோமதேஸ்வரர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த கோமதேஸ்வரர், பாகுபலி என்றும் அழைக்கப்படுகிறார்.

12 வருடங்களுக்கு ஒருமுறை இக்கோவிலில் மகா மஸ்தகாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 7-ந் தேதி இவ்விழாவை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்.

மகா மஸ்தகாபிஷேக விழாவில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மைசூருவை வந்தடைந்தார்.

நேற்று முன்தினம் மைசூருவிலேயே தங்கிய பிரதமர் நரேந்திர மோடி நேற்று மதியம் 1.30 மணியளவில் மைசூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சரவணபெலகோலாவில் துணை நகரங்கள் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்து இறங்கினார்.

அதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி காரில் கோமதேஸ்வரர் கோவில் அமைந்திருக்கும், விந்தியகிரி மலைக்கு கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள சாவுண்டராயா சபா மண்டபத்திற்கு சென்றார். அங்கு அவரை ஜெயின் மத ஆண், பெண் துறவிகள் உள்பட பலரும் வரவேற்றனர். பின்னர் விழா மேடைக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, மடாதிபதி சாருகீர்த்தி பட்டாரக்க சுவாமி ஏலக்காய் மாலை, சால்வை அணிவித்து, வெள்ளி கலசம் மற்றும் ஜெயின் மத கொடி ஆகியவற்றை கொடுத்து வரவேற்றார்.

அதையடுத்து விந்தியகிரி மலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 630 படிகளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். மேலும் சரவணபெலகோலாவில் 50 படுக்கை வசதிகளுடன் புதிதாக மாநில அரசு மற்றும் திகம்பரா ஜெயின் மடம் சார்பில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீபாகுபலி பொது மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி சரவணபெலகோலாவுக்கு ஹெலிகாப்டரில் வருவார் என்றும், பின்னர் ஹெலிகாப்டரில் இருந்தபடி கோமதேஸ்வரர் சிலைக்கு மலர்கள் தூவி வழிபடுவார் என்றும் கூறப்பட்டது. அதற்காக திட்டமும் வகுக்கப்பட்டது.

ஆனால் கோமதேஸ்வரர் கோவிலில் மகா மஸ்தகாபிஷேக விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக 5 ஆயிரம் பேர் அமர்ந்து அபிஷேகங்களை பார்க்கக்கூடிய அளவில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் அந்த பகுதியில் வந்தால், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் என்று கருதி கடைசி நேரத்தில் பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்று பாகுபலியின் சிலைக்கு மலர்கள் தூவும் திட்டம் கைவிடப்பட்டது.

இதையடுத்து பிரதமர் மோடி படிகள் வழியாக விந்தியகிரி மலை மீது ஏறி பாகுபலிக்கு அபிஷேகம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சாவுண்டராயா சபா மண்டபத்தில் இருந்தபடியே பகவான் பாகுபலியை தரிசித்துவிட்டு சென்றுவிட்டார்.  #tamilnews
Tags:    

Similar News