செய்திகள்
இடுக்கி அணையின் அழகிய தோற்றம்

43-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இடுக்கி அணை

Published On 2018-02-13 02:47 GMT   |   Update On 2018-02-13 02:47 GMT
ஆசியாவிலேயே 2-வது பெரிய அணை என்ற சிறப்புடன், 43-வது ஆண்டில் இடுக்கி அணை அடியெடுத்து வைக்கிறது.
இடுக்கி:

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள, இடுக்கி அணை, வரலாற்று சிறப்பு மிக்கதாக திகழ்கிறது. குறவன் மலை, குறத்தி மலை என்றழைக்கப்படும் இரு மலைகளை இணைத்து ‘ஆர்ச்’ வடிவில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே 2-வது பெரிய அணையாக விளங்குகிறது. அணையின் மொத்த உயரம் 555 அடியாகும்.

இந்த அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரில் இருந்து மின்உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மூலம் கேரளாவின் 40 சதவீத மின்தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த அணையின் பாதுகாப்பு நலன்கருதி முதலில் புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ஓணம் ஆகிய பண்டிகை நாட்களில் மட்டுமே சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் அந்த நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியதை தொடர்ந்து தற்போது சனி, ஞாயிறு ஆகிய வார விடுமுறை நாட்களிலும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளுக்கு படகு சவாரி வசதியும், பேட்டரி கார் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த அணை கடந்த 1976-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந் தேதி திறக்கப்பட்டது. அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அணையை திறந்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார். 42 ஆண்டுகளை கடந்து இடுக்கி அணை இன்னும் பழமை மாறாது கம்பீரமாக தோற்றமளிக்கிறது. இந்த அணை நேற்று 43-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இந்த அணையை கட்டும்போது 85 தொழிலாளர்கள் இறந்ததாக கூறப்படுகிறது. மேலும் அணையை உருவாக்க காரணமாக இருந்த தொழிலாளர்கள் சிலர் இன்னும் உயிரோடு இருக்கின்றனர்.

அவர்களில் ஒருவரான புருஷன் என்பவர் தனது நினைவுகளை கூறும்போது, ‘இடுக்கி அணை கட்டும் பணி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும். இடைவேளை கூட இல்லாமல் கல்லும், மண்ணும் சுமந்து செல்ல வேண்டும். அப்போது தினக்கூலி ரூ.2 ஆகும். பல ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்னும் பழமை மாறாது அணை கம்பீரமாக தோற்றமளிப்பது மகிழ்ச்சி தருகிறது’ என்றார்.  #tamilnews
Tags:    

Similar News