செய்திகள்

வருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்தலாம்: ஸ்டேட் வங்கி சிபாரிசு

Published On 2018-01-23 10:18 GMT   |   Update On 2018-01-23 10:18 GMT
பிப்ரவரி முதல்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், வருமானவரி விலக்கு உச்சவரம்பை 3 லட்சமாக உயர்த்தலாம் என ஸ்டேட் வங்கி சிபாரிசு செய்துள்ளது.
புதுடெல்லி:

2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி வருகிற 1-ந்தேதி தாக்கல் செய்கிறார்.

மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனிநபர் வருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தலாமா? என்று மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அந்த அளவுக்கு உயர்த்த இயலாத பட்சத்தில் ரூ.3 லட்சம் வரை உயர்த்தப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தனிநபர் வருமானவரி விலக்கு உச்ச வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்தலாம் என்று ஸ்டேட் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) பட்ஜெட்டுக்கு முன்பு ஆய்வு நடத்தி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

7-வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் ஊதிய அளவு உயர்த்தப்பட்டுள்ளது. எனவே வருமானவரி விலக்கு உச்சவரம்பை தற்போது இருக்கும் ரூ.2½ லட்சத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் உயர்த்தி ரூ.3 லட்சமாக அதிகரிக்கலாம்.

வீட்டுக்கடனாக ரூ.2 லட்சம் பெற்றவர்களுக்கு வட்டி செலுத்துவதில் வருமானவரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அதை ரூ.2½ லட்சமாக உயர்த்தும் பட்சத்தில் வீட்டுக்கடன் வாங்கிய 75 லட்சம் பேர் பயன் அடைவார்கள். வருமான வரி செலுத்துவதில் இருந்து 75 லட்சம் பேருக்கு விலக்கு அளிக்கப்படும். அரசுக்கு இதன் மூலம் ரூ.7,500 கோடி மட்டுமே செலவாகும்.

மேலும் வங்கிகளில் சேமிப்புகள், வைப்பு தொகை வைத்து இருப்பவர்களுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் வரை டி.டி.எஸ்.சில் இருந்து விலக்கு இருக்கிறது. இந்த தொகையையும் உயர்த்தலாம்.

இந்த பட்ஜெட் நாட்டின் முழுமையான வளர்ச்சிக்காகவும், மத்திய அரசின் நீண்ட கால, நடுத்தர கால இலக்குகளை அடையவும் உதவும். எங்களின் ஆய்வுப்படி இந்த ஆண்டு பட்ஜெட்டில் விவசாயம், சிறு, குறுத்தொழில்கள், அடிப்படை கட்டமைப்பு, அனைவருக்கும் வீடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம். #Tamilnews
Tags:    

Similar News