செய்திகள்

ஒரே ஆதார் அட்டையில் 9 மொபைல் எண்கள் இணைப்பு - பதிலளித்த ஆதார் நிறுவனம்

Published On 2018-01-23 01:20 GMT   |   Update On 2018-01-23 01:20 GMT
ஆதார் அட்டை எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்க சென்ற பெண் ஒருவர் தனது அட்டையுடன் ஒன்பது மொபைல் எண்கள் இணைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். #AadhaarScam #AadhaarMobileLinking
புதுடெல்லி:

இந்தியாவில் பிறந்த குழந்தைகள் முதல் அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதோடு தற்போது அந்த ஆதார் அட்டை எண்ணை அனைத்து ஆவணங்களிலும் இணைக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மார்ச் 31-ம் தேதி கடைசி நாளாகும்.



இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு பெண் ஏர்டெல் அலுவலகத்திற்கு தன்னுடைய ஆதார் அட்டையை மொபைல் எண்ணுடன் இணைப்பதற்காக சென்றார். ஆனால் அவர் கொடுத்த ஆதார் எண்ணுடன் ஏற்கனவே 9 மொபைல் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதாக ஏர்டெல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதனால் அந்த பெண் அதிர்ச்சியில் உறைந்தார்.

இதுகுறித்து அந்த பெண் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், எனது வாழ்வில் மிகப்பெரிய அதிர்ச்சி. நான் 2010-ம் ஆண்டிலிருந்து உபயோகித்துவரும் ஒரே ஏர்டெல் எண்ணுடன், ஆதார் அட்டை எண்ணை இணைக்க சென்றேன். ஆனால் எனது ஆதார் எண்ணுடன் ஏற்கனவே 9 மொபைல் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதாக கூறினார். இங்கு என்ன நடக்கிறது? என கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த ஆதார் நிறுவனம், இப்போது தங்கள் ஆதார் அட்டையுடன் எத்தனை எண்கள் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மக்கள் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்த விசயத்தில், உங்கள் ஆதார் எண்ணை தவறாக பயன்படுத்தியதற்காக அந்த நிறுவனத்தின் மீது டிராய் இடம் புகார் அளியுங்கள். இந்த சம்பவம் தொடர்பாக ஆதாரங்களுடன் அந்த நிறுவனம் பதிலளிக்க வேண்டும். முன்னர் பின்பற்றுவந்த முறையில் உங்கள் ஆவணங்களுடன் எத்தனை எண்கள் இணைக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிய முடியாது என கூறியுள்ளது.

இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு ஏர்டெல் நிறுவனம் தற்போது பதிலளித்துள்ளது. அந்த பெண்ணின் ஆதார் அட்டையில் வேறு மொபைல் எண்கள் இணைக்கப்படவில்லை என்றும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு நடந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை

கடந்த சில நாட்களுக்கு முன்னர் 500 ரூபாய்க்கு ஆதார் விவரங்கள் விற்கப்படுவது குறித்து ஒரு பத்திரிக்கையாளர் ஆதரங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #AadhaarScam #AadhaarMobileLinking #tamilnews 
Tags:    

Similar News