செய்திகள்

2018-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 6-ம் தேதி நடைபெறும்: சி.பி.எஸ்.இ. அறிவிப்பு

Published On 2018-01-22 10:01 GMT   |   Update On 2018-01-22 10:01 GMT
இந்த ஆண்டுக்கான மருத்துவ பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வு மே 6-ம் தேதி நடைபெறும் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.#NEET
புதுடெல்லி:

மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது. தனியார் மருத்துக் கல்லூரிகள் கொள்ளை லாபம் அடிப்பதைத் தடுக்கவும், கல்வியின் தரத்தை உயர்த்தவும், இந்த தேர்வு முறையை அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால், சி.பி.எஸ்.இ. தரத்தில் கேள்வித்தாள் இடம் பெற்றிருப்பதால், மாநில பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வை சந்திப்பதில் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எனவே, நீட் தேர்வை தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. அரசாங்கமும் எதிர்ப்பு தெரிவித்து, நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும்படி வலியுறுத்தியது. இதனால், முதல் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு நீட் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

இந்நிலையில், 2018-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 6-ம்தேதி நடைபெறும் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களையும் கருத்தில் கொண்டு, நீட் கேள்வித்தாளில் மாநில பாடத்திட்டங்களையும் இணைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், நீட் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் இந்த ஆண்டு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #NEET #Tamilnews
Tags:    

Similar News