செய்திகள்

மத்திய பட்ஜெட் தயாரிப்புக்கு முன்னதாக அல்வா கிண்டுவது ஏன்?: சுவாரஸ்ய தகவல்

Published On 2018-01-21 09:22 GMT   |   Update On 2018-01-21 09:22 GMT
மத்திய பட்ஜெட் அச்சடிப்பதற்கு முன்னதாக நிதி மந்திரியாக உள்ளவர் அல்வா கிண்டி ஊழியர்களுக்கு வழங்கும் நிகழ்வு பூஜை, சம்பிரதாயம் என அனைவரும் நினைக்கின்றனர். ஆனால், அதன் சுவாரஸ்ய பின்னணி வேறு.
புதுடெல்லி:

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் கடைசி தேதியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. தற்போது, ரெயில்வே பட்ஜெட் இணைக்கப்பட்டு பிப்ரவரி முதல் தேதியில் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் தாக்கலுக்கு சரியாக 11 நாள் முன்னதாக மத்திய அரசு செயலகத்தில் உள்ள நார்த் ப்ளாக்கில் உள்ள நிதி அமைச்சகத்தில் அல்வா கிண்டப்படுவது வழக்கம்.

பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட உள்ள ஊழியர்களுக்கு மத்திய நிதி மந்திரியாக இருப்பவர் அல்வா வழங்குவார். எல்லோருமே, இது பூஜை, வழிபாட்டு முறை என நினைத்துக்கொண்டுள்ளனர். ஆனால், இதன் பின்னணியே வேறு.

சுதந்திரம் அடைந்த பின்னர் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் குடியரசுத்தலைவர் மாளிகையில் அச்சடிக்கப்பட்டது. 1950-ம் ஆண்டு பட்ஜெட் தகவல்கள் முன்னதாகவே கசிந்தது. இதனால், மிண்டோ சாலையில் உள்ள அரசு அச்சகத்துக்கு பட்ஜெட் மாற்றப்பட்டது.

1980-ம் ஆண்டில் நார்த் ப்ளாக்கில் உள்ள அடித்தளத்தில் நிரந்தரமாக இதற்கென சிறப்பு வசதிகளுடன் அச்சகம் உருவாக்கப்பட்டது. தற்போது வரை அங்குதான் பட்ஜெட் அச்சடிக்கப்படுகிறது. பட்ஜெட் தயாரிக்கும் பணியில் 120 அதிகாரிகள் ஷிப்ட் முறையில் வேலை செய்வர்.

ஷிப்ட் முடிந்த உடன் வீட்டுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கக்கூடாது. பாராளுமன்றத்தில் நிதிமந்திரி பட்ஜெட்டை வாசிக்கும் வரை அவர்களுக்கு அந்த அச்சகம்தான் வீடு. செல்போன் போன்ற எவ்வித தொலைபேசிக்கும் அங்கு அனுமதி இல்லை. மிக மிக அவசரம் என்றாலே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளியே வர இயலும். அதுவும், பாதுகாப்பு அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் அவர்கள் இருப்பார்கள்.

உடல்நலக்குறைவு என்றால் அருகிலுள்ள மருத்துவமனையில், அவர்களுக்காகவே இடங்கள் ரிசர்வ் செய்யப்பட்டிருக்கும். 11 நாட்களும் அவர்கள் வெளி உலகத்துடன் துண்டிக்கப்பட்டே இருப்பார்கள். அச்சகத்தின் உள்ளே ஒரு தொலைபேசி இருக்கும், அதில் இன்கம்மிங் வசதி மட்டுமே உண்டு. இந்த தொலைபேசி வழியாக பேசப்படும் எல்லா வார்த்தைகளும் துல்லியமாக கண்காணிக்கப்படும்.

நிதி மந்திரிக்கு மட்டுமே எந்நேரத்திலும் உள்ளே செல்லும் அனுமதி உண்டு. நிதித்துறை செயலாளர்கள் கூட சிறப்பு பாஸ் பெற்றே உள்ளே செல்ல முடியும். அரசு அலுவலக கம்ப்யூட்டர்கள் எப்போதுமே, தேசிய தகவலியல் மையத்துடன் (NIC) இணைக்கப்பட்டிருக்கும்.

ஆனால், பட்ஜெட் தகவல்கள் ஹேக் செய்யப்பட வாய்ப்பு உள்ளதால் இந்த 11 நாட்களும் அச்சகத்தில் உள்ள கம்ப்யூட்டர்கள் மேற்கண்ட இணைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டிருக்கும்.

இவ்வாறாக, உலகின் எவ்வித தொடர்பும் இல்லாமல் 11 நாட்கள் பணியாற்றும் ஊழியர்களை உற்சாகப்படுத்தவே அல்வா வழங்கும் முறை கொண்டுவரப்பட்டது. அதுவே, தற்போது வழக்கமாகிவிட்டது.
Tags:    

Similar News