செய்திகள்

மலாலா வாழ்க்கை வரலாறு திரைப்படம்: காஷ்மீரில் படப்பிடிப்பு தீவிரம்

Published On 2018-01-19 10:01 GMT   |   Update On 2018-01-19 10:01 GMT
ஜம்மு-காஷ்மீரில், மலாலா யூசுப்சாயின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.#malalayousafzai #gulmakai
ஸ்ரீநகர்: 

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் தெக்ரீக்-இ-தலீபான் தீவிரவாதிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெண் கல்விக்கு தடை விதித்து இருந்தனர். அப்போது அங்கு வசித்து வந்த மலாலா யூசுப்சாய் என்ற சிறுமி தீவிரவாதிகளின் மனித உரிமை மீறலுக்கு எதிராகவும், பெண் கல்விக்கு ஆதரவாகவும் போராடி வந்தார்.

இதனால் கோபத்துக்கு உள்ளான தீவிரவாதிகள் சிறுமி மலாலா மீது கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் 9-ந் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தினர். அவரது அமைதி சார்பு நடவடிக்கைகள், மதசார்பற்ற தன்மை மற்றும் தலீபான் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக இந்த தாக்குதலை நடத்தியதாக தலீபான் அமைப்பு அறிவித்தது.

எனினும் இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக படுகாயங்களுடன் உயிர் பிழைத்த மலாலா பின்னர் இங்கிலாந்து சென்று சிகிச்சை பெற்றார். தற்போது வெளிநாட்டிலேயே வசித்து வரும் அவர் தொடர்ந்து பெண் கல்விக்காக குரல் கொடுத்து வருகிறார். இந்த சமூக நலப்பணிகளுக்காக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது.

இதற்கிடையே, மலாலா யூசுப்சாயின் வாழ்க்கை வரலாறு குல் மகாய் என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. ஏற்கனவே சில இடங்களில் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் ஜம்மு காஷ்மீரிலும் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், காஷ்மீரில் நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக படப்பிடிப்பு தாமதம் ஆனது. 

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மலாலா யூசுப் சாயின் வாழ்க்கை வரலாற்று படத்தின் படப்பிடிப்பு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களாக நடைபெற்ற படப்பிடிப்பில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

குல்மார்க், சோனாமார்க் மற்றும் டால் ஏரியில் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இன்று மத்திய காஷ்மீரின் கங்கன் கிராமத்தில் முக்கிய காட்சி படமாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனந்த்குமார் தயாரிப்பில் அம்ஜத் கான் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் ஜூன் மாதம் திரைக்கு வருகிறது. #malalayousafzai #gulmakai #tamilnews
Tags:    

Similar News