செய்திகள்

நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் சிக்கியுள்ளது - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பேட்டி குறித்து காங்கிரஸ் கவலை

Published On 2018-01-12 09:42 GMT   |   Update On 2018-01-12 09:42 GMT
சுப்ரீம் கோர்ட்டு தலைமைநீதிபதி மீது நான்கு நீதிபதிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள சம்பவம் நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் சிக்கியுள்ளதை காட்டுவதாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது. #SupremeCourt #DemocracyInDanger

புதுடெல்லி:

இந்திய வரலாற்றில் முதல்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள்  இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப் உள்ளிட்ட நான்கு பேரும் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர். 

இந்த சந்திப்பின் போது உச்சநீதிமன்ற வளாகத்தில் கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருவதாகவும், இதே நிலை நீடித்தால் நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இதுகுறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தெரிவித்தும், சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அனைத்து முடிவுகளையும் தலைமை நீதிபதியே தனிப்பட்ட முறையில் எடுத்து வருகிறார். மற்ற நீதிபதிகளுக்கு அவர் வாய்ப்பு அளிக்க வேண்டும். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நீக்குவது பற்றி தேசம் சிந்திக்க வேண்டும், என கூறினர்.

இதையடுத்து தலைமைநீதிபதி தீபக் மிஸ்ரா இன்று மதியம் 2 மணியளவில் செய்தியாளர்களை சந்திப்பார் என கூறப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக இந்த சந்திப்பு பின்னர் ரத்து செய்யப்பட்டது.



இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தலைமைநீதிபதி மீது நான்கு நீதிபதிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது, நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் சிக்கியுள்ளதை காட்டுவதாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் தலைமை டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "உச்சநீதிமன்றத்தின் செயல்பாட்டைப் பற்றி, 4  உச்சநீதிமன்ற நீதிபதிகள் கவலை தெரிவித்தற்கு நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம். ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது", என கூறப்பட்டுள்ளது. #SupremeCourt #DemocracyInDanger #tamilnews
Tags:    

Similar News