செய்திகள்

ஊழல் வழக்கில் விடுவிப்பு: பினராயி விஜயனுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீசு

Published On 2018-01-12 07:41 GMT   |   Update On 2018-01-12 07:41 GMT
கேரளாவில் 1990-ம் ஆண்டு கம்யூனிஸ்டு ஆட்சியின் போது நடந்த நீர் மின் திட்டங்களில் ஊழல் தொடர்பான மேல் முறையீட்டு வழக்கில் பினராயி விஜயனுக்கு நோட்டீசு அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

திருவனந்தபுரம்:

கேரள முதல்-மந்திரியாக கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன் இருந்து வருகிறார்.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின் மீது சோலார் பேனல் ஊழல் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை தேர்தல் பிரசாரத்தின்போது கம்யூனிஸ்டு கட்சியினர் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி ஆட்சியை பிடித்தனர்.

மேலும் தங்களது ஆட்சி ஊழல் புகார் இல்லாத நல்லாட்சியாக இருக்குமென்றும் பினராயி விஜயன் பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அவரது மந்திரிசபையில் பதவி வகித்த சில மந்திரிகளே ஊழல், செக்ஸ் புகார்களில் சிக்கி, பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் முதல்-மந்திரி பினராயி விஜயனே ஊழல் புகாரை எதிர்கொள்ளும் சூழ்நிலை உருவாகி உள்ளது. கடந்த 1990-ம் ஆண்டு கேரளாவில் கம்யூனிஸ்டு ஆட்சி நடந்தபோது பினராயி விஜயன் மின்சாரத்துறை மந்திரியாக பதவி வகித்தார்.

அப்போது நீர் மின் திட்டங்களில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து பினராயி விஜயன் உள்பட 10 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட்டு பினராயி விஜயன் உள்பட 7 பேரை விடுவித்தது. மற்ற 3 பேருக்கு எதிராக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த ஊழல் வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு பினராயி விஜயன் உள்பட 7 பேருக்கும் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

இதனால் கேரள அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  #tamilnews



Tags:    

Similar News