செய்திகள்

வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சம்: மத்திய அரசு பரிசீலனை

Published On 2018-01-11 05:39 GMT   |   Update On 2018-01-11 05:39 GMT
அரசுக்கு தனி நபர்கள் செலுத்தும் வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது,
புதுடெல்லி:

அரசுக்கு தனி நபர்கள் செலுத்தும் வருமான வரிக்கு தற்போது ரூ.2.5 லட்சம் வரைக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குட்பட்டவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.

இந்த வருமான வரி விலக்கு உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. இதைத் தொடர்ந்து நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறும் வகையில் வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்த மத்திய நிதி அமைச்சகம் பரிசீலினை செய்து வருகிறது.

மத்திய அரசுகொண்டு வந்த பண மதிப்பு இழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு போன்றவைகளால் நடுத்தர வர்க்கத்தினர் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது வாங்கும் சக்தியும், செலவினங்களும் குறைந்துள்ளது. எனவே நடுத்தர வர்க்கத்தினரை நிதி சிக்கல்களில் இருந்து விடுவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வருமான வரி விலக்கு உச்சவரம்பை இரட்டிப்பாக்கலாமா? என்று ஆலோசிக்கப்படுகிறது. அதில் இறுதி முடிவு எட்டப்பட்டால், வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயரும்.

அந்த அளவுக்கு உயர்த்த இயலாதபட்சத்தில் ரூ.3 லட்சம் வரை உயர்த்தப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் செய்யப்படாததால், இந்த ஆண்டு நிச்சயம் உயர்வு வரும் என்று தெரிகிறது.

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பும் வருமான வரி விலக்கு உச்சவரம்பை உயர்த்த பரிந்துரைத்துள்ளது. எனவே இந்த ஆண்டு வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
Tags:    

Similar News