செய்திகள்
நடிகை ரோஜா தனது காதுகளில் பூவை வைத்துக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

சந்திரபாபுநாயுடுவின் பேச்சை கிண்டல் செய்து ரோஜா காதில் பூ வைத்து நூதன போராட்டம்

Published On 2018-01-11 04:54 GMT   |   Update On 2018-01-11 04:54 GMT
பாபு வந்தால் ஜாப் வரும் என்ற சந்திரபாபுநாயுடுவின் பேச்சை கிண்டல் செய்து, நடிகை ரோஜா எம்.எல்.ஏ. தன்னுடைய காதுகளில் பூவை வைத்துக் கொண்டு புத்தூரில் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஸ்ரீகாளஹஸ்தி:

ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு மாநிலம் முழுவதும் நடக்கும் சில விழாக்கள், கூட்டங்களில் பங்கேற்றுப் பேசும்போது, ‘‘பாபு வந்தால் ஜாப் (வேலை)’’ வரும் என பேசி வருகிறார்.

சந்திரபாபுநாயுடுவின் இந்தப் பேச்சில் உண்மை இல்லை என்றும், அவர் இளைஞர்களை ஏமாற்றுவதற்காகவே இதுபோல் பேசி வருகிறார் என்றும் கூறி, அவரின் பேச்சை கிண்டல் செய்து நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும் நடிகை ரோஜா தனது ஆதரவாளர்களுடன் புத்தூரில் திரண்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது ரோஜா எம்.எல்.ஏ. தன்னுடைய இரு காதுகளில் பூவை வைத்துக் கொண்டும், சந்திரபாபுநாயுடுவின் மேற்கண்ட பேச்சை கிண்டல் செய்தும் போராட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.

சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரபாபுநாயுடு, தன்னுடைய தொகுதியான குப்பம் பகுதியில் படித்த இளைஞர்களுக்கு உரிய வேலை வாய்ப்பை வழங்கவில்லை. அவருடைய மகன் லோகேஷ், மந்திரி அமர்நாத்ரெட்டி ஆகியோரும் மாநிலத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு எந்த ஒரு வேலை வாய்ப்பையும் வழங்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இளைஞர்களுக்கு தனியார் வேலை வாய்ப்பும் இதுவரை கிடைக்கவில்லை. வேலையில்லா இளைஞர்களுக்கு ஒவ்வொரு மாதமும் உதவித்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்குவதாக அவர் தெரிவித்தார். ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை. பாபு வந்தால் ஜாப் வரும் என்ற வார்த்தைக்கு ஏற்றார்போல் சந்திரபாபுநாயுடு ஆட்சிக்கு வந்ததும் அவரின் மகன் லோகேசுக்கு மட்டுமே மந்திரி பதவி வழங்கி உள்ளார்.

போராட்டத்தில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர் அணியினர், வேலையில்லா பட்டதாரிகள், இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். நூதனப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களின் காதுகளில் பூவை வைத்திருந்தனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சந்திரபாபுநாயுடுவை கிண்டல் செய்து எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பேனரை வைத்திருந்தனர்.  #tamilnews




Tags:    

Similar News