செய்திகள்

தாஜ்மகாலில் நெரிசல்: தள்ளுமுள்ளுவில் 5 பேர் காயம்

Published On 2017-12-30 10:14 GMT   |   Update On 2017-12-30 10:14 GMT
தாஜ்மகாலை பார்ப்பதற்காக நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளுவில் சிக்சி 5 பேர் காயமடைந்தனர்.
ஆக்ரா:

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் உள்ளது. விடுமுறை நாட்கள் என்பதால் அங்குவரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தாஜ்மகாலை பார்ப்பதற்காக நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். உள்ளே நுழைவதற்கான நேரம் முடியும் தருவாயில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்து இருந்தனர்.

கிழக்கு நுழைவு வாயில் பகுதியில் திரண்டு இருந்த இந்த கூட்டத்தினரால் அங்கு லேசான நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 5 பேர் காயம் அடைந்தனர். அங்கு நின்ற மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துரிதமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கூட்டத்தை கட்டுப்படுத்த மாற்று நடவடிக்கை எடுக்க ஏற்கனவே தொல் பொருள் ஆராய்ச்சி நிறுவனத்திடம் மத்திய தொழில் பாதுகாப்பு படை கேட்டுக் கொண்டது. ஆனாலும் மாற்று ஏற்பாடு எதுவும் செய்யப்படவில்லை.

தாஜ்மகாலை காணவரும் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. 2008-ம் ஆண்டில் 31.87 லட்சம் பேர் பார்த்தனர். 2015-ம் ஆண்டில் 64.45 லட்சமாக பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

வார கடைசி நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் தினசரி 40 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பயணிகள் தாஜ்மகாலுக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News