செய்திகள்

குஜராத்தில் பட்டேல் - பிற்படுத்தப்பட்டோர் 12 பேருக்கு மந்திரி பதவி

Published On 2017-12-27 09:48 GMT   |   Update On 2017-12-27 09:48 GMT
குஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி, பட்டேல் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தினரை தங்கள் பக்கம் இழுக்கும் வகையில் அந்த இருதரப்பினரை சேர்ந்த 12 பேருக்கு மந்திரி பதவிகள் வழங்கியுள்ளனர்.
அகமதாபாத்:

குஜராத்தில் பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சியை பிடித்ததையடுத்து விஜய் ரூபானி தலைமையிலான மந்திரிசபை பதவி ஏற்றுக்கொண்டது.

இதில் துணை முதல்-மந்திரியாக நிதின் பட்டேல் நியமிக்கப்பட்டார். இவர்களுடன் சேர்த்து 20 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

20 பேரில் 6 பேர் பட்டேல் சமூகத்தை சேர்ந்தவர்கள். 6 பேர் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் தவிர பழங்குடியினத்தை சேர்ந்த 3 பேருக்கும் தலித் இனத்தை சேர்ந்த ஒருவருக்கும் மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு பெண் மந்திரியும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டசபை தேர்தலில் பட்டேல் சமூகத்தை சேர்ந்த தலைவர் ஹர்திக் பட்டேல் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்தார். அதேபோல பிற்படுத்தப்பட்ட சமூக தலைவரான அல்பேஷ்தாகூர் காங்கிரசில் சேர்ந்து பணியாற்றினார்.

இவர்கள் இருவரும் காங்கிரசுக்கு ஆதரவாக இருந்ததால் இந்த சமூக ஓட்டுகளும் பெருமளவு காங்கிரசுக்கு கிடைத்தது. இதன் காரணமாக சவுராஸ்டிரா பகுதியில் பாரதிய ஜனதாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. கடந்த தேர்தலில் 34 இடங்களை பிடித்திருந்த நிலையில் இந்த தேர்தலில் 19 இடங்கள் தான் கிடைத்தது.

இதேபோல மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் இதன் தாக்கம் இருந்தது. இதனால் தான் பாரதிய ஜனதாவுக்கு கடந்த தேர்தலைவிட இடங்கள் குறைந்தன. ஓட்டு சதவீதமும் வீழ்ச்சி அடைந்தது.

ஹர்திக் பட்டேல் மற்றும் அல்பேஷ் தாகூர் செல்வாக்கை குறைத்து அவர்களின் சமூகத்தினரை பாரதிய ஜனதா பக்கம் இழுக்கும் வகையில் தான் பட்டேல் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக அளவில் மந்திரி பதவி கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
Tags:    

Similar News