செய்திகள்

கேரளாவில் ஓடும் ரெயிலில் தீப்பிடித்தது: பயணிகள் காயமின்றி தப்பினர்

Published On 2017-12-19 06:13 GMT   |   Update On 2017-12-19 06:13 GMT
கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீரென்று பயணிகள் இருந்த பெட்டியில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
திருவனந்தபுரம்:

பாட்னாவில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்லும் பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை 6.30 மணியளவில் சாலக்குடி பகுதியில் சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென்று அந்த ரெயிலில் பயணிகள் இருந்த ஒரு பெட்டியில் திடீரென்று தீ பிடித்துக் கொண்டது. ரெயில் வேகமாக சென்றுகொண்டிருந்ததால் காற்று காரணமாக அந்த தீ பெட்டியில் பரவத்தொடங்கியது.

இதனால் அதில் பயணம் செய்த பயணிகள் பயத்தில் அலறினார்கள். மேலும் ரெயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினார்கள்.

இதைதொடர்ந்து அந்த ரெயிலில் இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீப்பிடித்த ரெயில் பெட்டிக்கு விரைந்து சென்று தீயை அணைக்க ஏற்பாடு செய்தனர். இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்கள். முதல்கட்ட விசாரணையில் அந்த ரெயில் பெட்டியில் மின்கசிவு காரணமாக தீ பிடித்தது தெரியவந்தது. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

ஓடும் ரெயிலில் தீ பிடித்ததன் காரணமாக அந்த ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. மேலும் அந்த வழியாக சென்ற ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு தாமதமாக இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
Tags:    

Similar News