செய்திகள்

காங்கிரஸ் தொடர் அமளி: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

Published On 2017-12-15 11:25 GMT   |   Update On 2017-12-15 11:25 GMT
மன்மோகன் சிங் குறித்து பிரதமர் மோடி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று மக்களவை தொடங்கியதும் புதிய மந்திரிகளை  பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். இதனையடுத்து, மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு அவை திங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல் மாநிலங்களவை தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதனையடுத்து, புதிய மந்திரிகளை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். பின்னர், அவை நடவடிக்கை தொடங்கியதும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் சந்தித்ததாக பிரதமர் மோடி பேசியது குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மன்மோகன் சிங் குறித்து பேசியதற்கு பிரதமர் மோடி விளக்கம் அளிப்பதுடன் மன்னிப்பும் கோர வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்தனர். அந்த நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டது.

இதனைக் கண்டித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். இதனால், அங்கு கூச்சல், குழப்பம் நிலவியது. அதன்பின்னர், சரத்யாதவ் தகுதி நீக்கம் தொடர்பாக சில உறுப்பினர்களும் பேச முயற்சித்தனர். இதனால் மீண்டும் குழப்பம் நிலவியது. இதுபோன்ற காரணங்களால் அவை நடவடிக்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் முதலில் 12 மணி வரை அவையை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

அதன்பின்னர் 2.30 மணி வரையிலும், 3 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது. 3 மணிக்கு அவை தொடங்கியபோதும் காங்கிரஸ் உறுப்பினர்களின் அமளி நீடித்தது. அவையின் மையப்பகுதிக்கு வந்து அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. 

இதுபற்றி பாராளுமன்றத்திற்கு வெளியே காங்கிரஸ் தலைவர்கள் நிருபர்களிடம் கூறும்போது, “மன்மோகன் சிங் குறித்து மோடி கூறிய கருத்து துரதிர்ஷ்டவசமானது. எங்கள் நோட்டீஸ் மீது விவாதம் நடத்த அவைத்தலைவர் அனுமதிக்கவில்லை. இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது” என்றனர்.
Tags:    

Similar News