செய்திகள்

இரட்டை இலைக்கு லஞ்சம்: தினகரன் 21-ந்தேதி ஆஜராக கோர்ட்டு உத்தரவு

Published On 2017-12-15 04:49 GMT   |   Update On 2017-12-15 04:51 GMT
இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு தொடர்பாக டி.டி.வி.தினகரன் 21-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று டெல்லி கோர்ட்டு உத்தர விட்டுள்ளது.

புதுடெல்லி:

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 லட்சம் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு டெல்லி தனிக்கோர்ட்டில் நடந்து வருகிறது.

இதில் இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்திர சேகர் மீது கடந்த ஜூலை 15-ந்தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் தனிக் கோர்ட்டு நீதிபதி பூனம் சவுத்ரி முன்பு தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையில் டி.டி.வி.தினகரன், மல்லி கார்ஜூனா, சுகேஷ் சந்திர சேகர், ஹவாலா ஏஜெண்டுகள் புல்கித் குந்த்ரா, ஜெய் விக்ரம்ஹரன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன.


நேற்று இந்த வழக்கில் நீதிபதி கிரண்பன்சால் முன்பு டெல்லி குற்றப்பிரிவு போலீசார் துணை குற்றப்பத்திரிகை ஒன்றை தாக்கல் செய்தனர். 272 பக்கங்களை கொண்ட இந்த துணை குற்றப்பத்திரிகையில் டி.டி.வி.தினகரன், மல்லி கார்ஜூனா, சுகேஷ் சந்திர சேகர், நத்துசிங், புல்கித் குந்த்ரா, பி.குமார், லலித் குமார், ஜெய்விக்ரம் ஹான், நரேந்திரஜெயின் ஆகிய 9 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

டி.டி.வி.தினகரன் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 120பி (கிரிமினல் சதி), 201 (சாட்சியங்களை அழித்தல்) மற்றும் ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக டி.டி.வி.தினகரன் 21-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று டெல்லி கோர்ட்டு உத்தர விட்டுள்ளது.

Tags:    

Similar News