செய்திகள்

பத்மாவதி படத்துக்கு எதிரான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி

Published On 2017-11-24 09:36 GMT   |   Update On 2017-11-24 09:44 GMT
பத்மாவதி படத்தில் வரலாறு திரிக்கப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும் என்ற மனுவை டெல்லி ஐகோர்ட் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
சித்தூர் பகுதியை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து பத்மாவதி என்ற இந்தி திரைப்படம் தயாராகி உள்ளது. இந்தப் படம் வரும் டிசம்பர் மாதம் முதல் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு தரப்பினர் இந்தப் படத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், திட்டமிட்டபடி, இந்தப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த தீபிகா படுகோனே மற்றும் இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோரின் தலைக்கு தலா 5 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது கொடும்பாவிகளை எரித்த ஒரு அமைப்பினர், தீபிகாவை உயிருடன் எரித்து கொல்பவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கும்வரை பத்மாவதி படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநில அரசுகள் முன்னர் அறிவித்திருந்தன.

இந்நிலையில், ரஜபுத்திரர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் என்பதால் பத்மாவதி படத்தை குஜராத்தில் திரையிட அனுமதிக்க முடியாது என அம்மாநில முதல் மந்திரி விஜய் ருபானியும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தில் வரலாறு திரிக்கப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும். அதுவரை பத்மாவதி படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என்று அகன்ற ராஷிரிராவதி கட்சி சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கை (விடுமுறைக் கால) தலைமை நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான இருநபர் அமர்வு இன்று தள்ளுபடி செய்துள்ளது.

 

பத்மாவதி படத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? சினிமா தியேட்டர்களை எரிப்பவர்கள் இந்தப் படத்தை பார்த்திருக்கிறார்களா? இதைப்போன்ற மனுக்களின் மூலம் நீங்கள் போராட்டக்காரர்களை ஊக்குவிக்கிறீர்கள் என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

பத்மாவதி படத்துக்கு தடை விதிப்பது தொடர்பான கோரிக்கைகளை சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ள நிலையிலும், இவ்விவகாரம் மத்திய திரைப்பட தணிக்கை குழுவின் பரிசீலனையில் உள்ள நிலையிலும் விசாரிக்க வாய்ப்பில்லாத, அரைகுறையான அம்சங்களை கொண்ட இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News