செய்திகள்

பயணிக்கு தவறான குறுஞ்செய்தி அனுப்பிய ரெயில்வே நிர்வாகம் - ரூ.25 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு

Published On 2017-11-23 21:50 GMT   |   Update On 2017-11-23 21:50 GMT
ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதாக தவறான குறுஞ்செய்தி அனுப்பி பயணிக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரெயில்வே நிர்வாகம் 25000 ரூபாய் நஷ்ட ஈடு செலுத்த நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி: 

அலகாபாத்தில் வசித்து வருபவர் விஜய் பிரதாப் சிங், இவர் தனது மகன் அக்‌ஷந்த் சிங்கோடு அலகாபாத்தில் இருந்து முக்கிய வேலை நிமித்தமாக மே 29ம் தேதி டெல்லி பயணிக்க இருந்தார். இதன் காரணமாக மகாபோதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் இரண்டு டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தார்.

பயண நாளுக்கு முன்னதாக ஐ.ஆர்.சி.டி.சி.,யில் இருந்து ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதாப் சிங் மொபைல் எண்ணிற்கு தகவல் வந்தது. இதனால், அதே சமயத்தில் வேறு ரெயில்களும் டெல்லிக்கு இல்லாததால், தனியார் டாக்ஸி மூலம் டெல்லி சென்றார். ஆனால், ஐ.ஆர்.சி.டி.சி.,யில் இருந்து வந்தது தவறான தகவல் என்றும் அதுபோல, எந்த ரெயிலும் ரத்து செய்யப்படவில்லை என்று பிரதாப் சிங்கிற்கு பின்னர் தெரியவந்தது.

இதனால் கடும் மன உளைச்சல் அடைந்த பிரதாப் சிங், அலகாபாத் ரெயில்வே அலுவலகத்தை அணுகியபோது, அவர்கள் சரியான முறையில் அவருக்கு பதிலளிக்கவில்லை. இதனால், டெல்லி நுகர்வோர் ஆணையத்திடம் புகார் அளித்தார். அதில் தவறான குறுஞ்செய்தியால் தனக்கு கடும் மன உளைச்சலும், வீண் பணச்செலவும் ஏற்பட்டுள்ளதற்கு ரெயில்வே நிர்வாகம் நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். 

இந்த விசயம் தொடர்பாக பதிலளித்த ரெயில்வே தீர்ப்பாயம் டிக்கெட் தொடர்பான குறுஞ்செய்தி தகவல்கள் அனுப்புவது தங்களுடைய பணி அல்ல என்றும், அது தனியார் நிறுவனத்தின் தவறு என்றும் வாதத்தை முன்வைத்தனர். இதை ஏற்றுக்கொள்ளாத நுகர்வோர் ஆணையம் தவறாக குறுஞ்செய்தி அனுப்பி இருப்பது தெரியவந்ததும், அதை ஒப்புக்கொண்டு மீண்டும் சரியான செய்தி அனுப்பி இருக்க வேண்டும். அப்படி செய்யாததால், பயணிக்கு கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் என்றும், இதற்கு ரெயில்வே நிர்வாகம் 25,000 ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்து உத்தரவிட்டது.
Tags:    

Similar News