செய்திகள்

மானியங்களில் கசிவை தடுத்ததால் மத்திய அரசுக்கு ரூ.65 ஆயிரம் கோடி சேமிப்பு: பிரதமர் மோடி பேச்சு

Published On 2017-11-23 20:28 GMT   |   Update On 2017-11-23 20:28 GMT
மானியங்களில் கசிவை தடுத்ததால் மத்திய அரசு ரூ.65 ஆயிரம் கோடியை சேமித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
புதுடெல்லி:

மானியங்களில் கசிவை தடுத்ததால் மத்திய அரசு ரூ.65 ஆயிரம் கோடியை சேமித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

டெல்லியில், ‘சைபர் ஸ்பேஸ்’ என்னும் இணைய இடம் தொடர்பான உலகளாவிய மாநாடு நேற்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இணையதளம் இயல்பாகவே எல்லாவற்றையும் உள்ளடக்கியது ஆகும். ஆனால் திறந்த மற்றும் அணுகக்கூடிய இணையத்துக்கான தேடல், அடிக்கடி இணையதள தாக்குதல் போன்ற பாதிப்புக்கு வழிநடத்தக்கூடியது ஆகும்.

இணையதள தாக்குதல் சம்பவங்கள், இணைய தளங்களின் தோற்றத்தை கெடுக்கும் சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவை ஜனநாயக உலகில், இணையதள தாக்குதல்கள், குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல் என்று காட்டுகின்றன.

இணையதள குற்றங்களில் ஈடுபடுகிற கிரிமினல்களின் தீய செயல்களுக்கு நமது சமூகத்தின் பாதிக்கப்படுகிற பிரிவுகள் இரையாகி விடக் கூடாது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இணையதள பாதுகாப்பு குறித்த எச்சரிக்கை உணர்வு, வாழ்வின் ஒரு அம்சமாகி விட வேண்டும்.

இணையதள பாதுகாப்பு இன்றைய இளைய தலைமுறையினரின் கவர்ச்சிகரமான மற்றும் சாத்தியமான வாழ்க்கைத்தேர்வு என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

எப்போதும் மாறக்கூடிய அச்சுறுத்தல் நிலவரத்தை தடுக்கிற வகையில், பாதுகாப்பு அமைப்புகளிடையே தகவல் பகிர்வு, ஒருங்கிணைப்பு அத்தியாவசியமானது.

நிச்சயமாக ஒரு புறத்தில் தனிமனித உரிமை மற்றும் திறந்த மனப்பான்மை மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையே நல்லதொரு சம நிலையில் நாம் நடை போட முடியும்.

டிஜிட்டல் தொழில் நுட்பம், எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். வெளிப்படைத்தன்மை, தனி மனித உரிமை, நம்பிக்கை, பாதுகாப்பு குறித்து எழுகிற முக்கிய கேள்விகளுக்கு பதில் காண வேண்டும்.

ஜன்தன் வங்கி கணக்குகள், செல்போன்கள், பயோமெட்ரிக் அடையாள எண் ஆதார் ஆகியவை மானியங்கள் சரியான நபர்களை சென்றடைய உதவி உள்ளன. மேலும், இவற்றின்மூலம் இதுவரை 10 பில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.65 ஆயிரம் கோடி) கசிவில் இருந்து மத்திய அரசு சேமித்துள்ளது.

டிஜிட்டல் தொழில் நுட்பமானது, விவசாயிகள் வல்லுனர்களை அணுகவும், தங்களது விளை பொருட்களுக்கு நல்ல விலை பெறவும், சிறு தொழில் முனைவோர் அரசுக்கு பொருட்களை சப்ளை செய்யவும் உதவி இருக்கிறது. வங்கி அதிகாரிகள் முன் ஓய்வூதியதாரர்கள் போய் நிற்பதை அகற்றி உள்ளது. பெண்களுக்கு வேலை வாய்ப்பை அளித்துள்ளது.

நாம் நமது அனுபவங்களை, வெற்றிக்கதைகளை உலக சமூகத்துடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவோம்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News