செய்திகள்

பத்மாவதி படத்தில் தீபிகாவின் ஆபாச நடனம்: போராட்டக்காரர்கள் குற்றச்சாட்டு

Published On 2017-11-22 09:07 GMT   |   Update On 2017-11-22 09:07 GMT
நடிகை தீபிகா படுகோனே பத்மாவதி படத்தில் ஆபாச நடனம் ஆடியிருப்பதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
ஜெய்ப்பூர்:

இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் ‘பத்மாவதி’ படத்துக்கு நாளுக்கு நாள் ஆதரவும் எதிர்ப்பும் வலுத்துக் கொண்டே வருகிறது. இந்த படத்தில் ராஜபுத்ர சமூகத்தினர் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி அந்த சமூகத்தினர் படத்தை திரையிட கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, நடிகை தீபிகா ஆகியோருக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ராஜபுத்திர மக்கள் அதிகம் வசிக்கும் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், மராட்டியம், குஜராத் ஆகிய மாநிலங்களில் போராட்டம் வெடித்ததால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து ராஜ்புத்ர கிர்னி சேனா நிர்வாகி கூறியதாவது:-

பத்மாவதி படத்தில் ராணி பத்மினியாக நடித்துள்ள தீபிகா, கூமார் எனும் நடனத்தை ஆடுவது போல் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இது ராஜஸ்தானில் திருமணங்களில் ஆடப்படும் நடனம் ஆகும். இந்த நடனத்தை அரச குல பெண்கள் ஆடமாட்டார்கள். ஆனால் ராணிபத்மினி கூமார் நடனம் ஆடுவது போல் காட்டப்படுவது தவறு.

மேலும் உடலை மறைத்து ஆட வேண்டிய நடனத்தில் தீபிகா இடுப்பு தெரியும்படி ஆடி இருக்கிறார். இது எங்கள் மனதை புண்படுத்துவதுபோல் இருக்கிறது.

எப்படியாவது ராணி பத்மினியை அடையத் துடிக்கும் வில்லனான அலாவுதீன் கில்ஜி தனது கனவில் தீபிகாவுடன் நெருக்கமாக ஆடிப்பாடும் படியான பாடல் காட்சி இடம் பெற்றுள்ளது. கருத்து சுதந்திரம் எனும் பெயரில் இதுபோன்ற தவறான காட்சிகளை மக்கள் மனதில் விதைக்கப் பார்க்கிறார்கள்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் கோட்டையிலும், சித்தூர் கார் கோட்டையிலும் ராஜபுத்ரர்களிடம் அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடந்தது. அதை தட்டிக் கேட்டபோது எங்களை தகாத முறையில் பேசி அவமதித்ததால் பிரச்சினை உருவானது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தச் சென்றவர்களையும் முறையாக நடத்தவில்லை.

ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இன்னமும் அரச குடும்பத்தினருக்கு அதே மரியாதை வழங்கப்படுகிறது. தற்போதைய முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, குவாலியர் அரச குடும்பத்தில் பிறந்து தோல்பூர் அரச குடும்பத்தில் மருமகளாக இருக்கிறார். ஒரு அரச குடும்ப வாரிசு ஆளும் மாநிலத்தில் ஒரு ராணியை எப்படி தவறாக சித்தரிக்கலாம். எனவேதான் எதிர்க்கிறோம்.

இவ்வாறு போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News