search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "protesters"

  • மோனா லிசாவின் "மர்ம புன்னகை" தினந்தோறும் பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது
  • உணவு முக்கியமா அல்லது ஓவியம் முக்கியமா என அந்த அமைப்பினர் கேட்டனர்

  15-வது நூற்றாண்டில், இத்தாலி நாட்டை சேர்ந்த பிரபல ஓவியர் லியோனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) வரைந்த உலக புகழ் பெற்ற ஓவியம், மோனா லிசா (Mona Lisa).

  மோனா லிசா ஓவியம், தற்போது பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரின், சியன் (Seine) நதிக்கரையில் உள்ள லூவர் (Louvre) அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.


  மோனா லிசா ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் பெண்ணின் "மர்ம புன்னகை" தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது.

  அந்த ஓவியம் விஷமிகளால் நாசப்படுத்தப்படுவதை தடுக்க, பிரான்ஸ் அரசு, பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு தடுப்பும், அதை தாண்டி குண்டு துளைக்க முடியாத ஒரு கண்ணாடியும் வைத்து மறைத்துள்ளது.

  நேற்று காலை சுமார் 10:00 மணியளவில் இரு பெண்கள் பார்வையாளர்களுடன் கலந்து அருங்காட்சியகத்திற்கு உள்ளே நுழைந்தனர்.

  திடீரென அவர்கள் தங்கள் கையில் வைத்திருந்த கோப்பையில் இருந்த ஆரஞ்சு நிற சூப்பை மோனா லிசா ஓவியத்தின் மீது வீசினர்.

  தொடர்ந்து ஓவியத்திற்கு முன் இருந்த தடுப்பை தாண்டி சென்று ஓவியத்தை ரசித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை நோக்கி உரையாற்ற தொடங்கினர்.

  ரிபோஸ்டெ அலிமென்டெய்ர் (Riposte Alimentaire) எனும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த அவர்கள், தங்கள் உரையில்,"எது முக்கியம்? ஒரு ஓவியமா? அல்லது ஆரோக்கியமான உணவு மனிதகுலத்திற்கு தொடர்ந்து உணவு கிடைப்பதா? தவறான விவசாய கொள்கைகளால் விவசாயிகள் பரிதாப நிலையில் இழக்கின்றனர்" என கூறினர்.


  எதிர்பாராத இந்த செயலை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த பாதுகாப்பு பணியினர் அந்த இருவரையும் தப்ப விடாமல் பிடித்தனர்.

  அங்கிருந்த பிற சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.

  இச்சம்பவத்தால் மோனா லிசா ஓவியத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என அருங்காட்சியகம் தெரிவித்தது.

  சம்பவம் நடந்த பகுதி உடனடியாக சுத்தம் செய்யப்பட்டு பார்வையாளர்கள் மீண்டும் சிறிது நேரத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

  அந்த இருவரையும் கைது செய்த பிரான்ஸ் காவல்துறை தீவிர விசாரணை செய்து வருகிறது.

  இது குறித்து பிரான்ஸ் நாட்டின் கலாச்சார அமைச்சர், ரசிடா டாடி தனது எக்ஸ் கணக்கில், "மோனா லிசா நமது பாரம்பரியத்தின் அடையாளங்களில் ஒன்று. எக்காரணம் கொண்டும் அதற்கு தீங்கு விளைவிப்பது ஏற்கப்பட கூடியது அல்ல" என பதிவிட்டுள்ளார்.

  • பொருளாதார சிக்கல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது
  • டெபாசிட் செய்த பணத்தை திரும்ப வழங்காததால் பொதுமக்கள் போராட்டம்

  மேற்காசிய நாடான லெபனானில் கடுமையான பொருளாதார சிக்கல் நிலவுகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர அந்நாட்டு அரசாங்கமும், மத்திய வங்கியும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் பொதுமக்களின் வங்கி சேமிப்புகளை எடுக்க முடியாத சூழல் நிலவுவதால், இதனை எதிர்த்து பொதுமக்கள் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

  பல வங்கி கட்டிடங்களை போராட்டக்காரர்கள் சூறையாடினார்கள். வங்கிகளுக்கு முன்பாக பெரிய டயர்களை கொளுத்தியும், வங்கி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் எதிர்ப்புகளை காட்டி வருகிறார்கள். தலைநகர் பெய்ரூட்டிற்கு வெளியே ஆடி வங்கி, பெய்ரூட் வங்கி, மற்றும் மவுண்ட் லெபனான் சின் எல்-ஃபில்.ல் உள்ள பிப்லோச் வங்கி ஆகியவற்றுக்கெதிராக போராட்டம் தீவிரமாக நடைபெற்றது.

  பலரின் வாழ்வாதார சேமிப்புகள் அழிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டும் போராட்டக்காரர்கள், தங்கள் பணத்தை திரும்ப கேட்டும், இந்த நெருக்கடிக்கு மத்திய வங்கி ஆளுநர் ரியாத் சலாமே உட்பட ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகள் அனைவரும் பொறுப்பெற்க வேண்டும் என்றும் கூறினர்.

  போராட்டக்காரர்களில் ஒருவர், "நாங்கள் நீண்ட காலம் பொறுத்து விட்டோம். இனி அது முடியாது" என கூறினார். மற்றொரு போராட்டக்காரர், "வங்கிகளுக்கு நாங்கள் ஒரு செய்தியை இந்த போராட்டத்தின் வழியாக தெரிவிக்கிறோம். எங்கள் உரிமைகளை இன்றும் சரி, இன்னும் 100 ஆண்டுகளானாலும் சரி இழக்க மாட்டோம். இந்த செய்தியை வங்கிகள் புரிந்து கொள்ள வேண்டும்" என கூறினார்.

  இந்த நெருக்கடி நிலை உருவாகக் காரணமான அதிகாரிகளில் அரசியல் தொடர்புடையவரான சலாமே குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார். பல்லாயிரக்கணக்கான டாலர்கள் மக்கள் பணத்தை கையாடல் செய்ததாக அவருக்கெதிரான விசாரணைக்காக பிரான்ஸ் நாடு ஒரு கைது வாரண்ட் பிறப்பித்திருக்கும் சூழ்நிலையில் இண்டர்போல் அமைப்பும் அவருக்கெதிராக அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ஆனால், சலாமே இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

  பல மாதங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் முட்டுக்கட்டைகளை நீக்கி, ஒரு அதிபரை தேர்வு செய்ய லெபனான் நாடாளுமன்றத்தால் 12-வது முறையாக இயலாமலிருக்கும் சூழ்நிலையில் இந்த போராட்டம் வெடித்துள்ளது.

  2019-ல் இருந்து லெபனானின் பொருளாதார சிக்கலில் தவித்து வருகிறது. நவீன வரலாற்றில் இது மிகவும் மோசமானது என்று உலக வங்கி தெரிவித்திருந்தது. அமெரிக்க டாலருக்கு இணையாக லெபனானின் பணமதிப்பு மிகவும் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம் தொடர்பாக மத்திய மந்திரியை சந்திக்க போராட்டக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
  • அதன்படி வருகிற 21-ந் தேதி டெல்லி சென்று மத்திய மந்திரியிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என்றனர்.

  திருமங்கலம்

  மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து திருமங்கலம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள், வாகன ஓட்டிகள், பொது மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

  கடந்த மாதம் 22-ந் தேதி திருமங்கலத்தில் கடைய டைப்பு போராட்டமும் நடைபெற்றது. சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

  இந்தநிலையில் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரியை சந்தித்து போராட்டக் குழுவினர் மனு கொடுக்க உள்ளனர். இதற்காக அவர்கள் வருகிற 21-ந் தேதி டெல்லி செல்ல உள்ளனர். இதற்கான ஆலோசனை கூட்டம் திருமங்கலத்தில் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஜெயராமன், அ.தி.மு.க. நகரச் செயலாளர் விஜயன், மேற்கு மாவட்ட பா.ஜனதாக கட்சி பொதுச் செயலாளர் சிவலிங்கம் மற்றும் வியாபாரிகள், நிர்வாகிகள், பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.

  கூட்டத்துக்கு பின் போராட்டக்குழுவினர் கூறுகையில், கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் முயற்சி செய்து மத்திய மந்திரி நிதின் கட்காரியை சந்திக்க அனுமதி பெற்றுக் கொடுத்துள்ளார்.

  அதன்படி வருகிற 21-ந் தேதி டெல்லி சென்று மத்திய மந்திரியிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என்றனர்.

  சபரிமலையில் தரிசனம் செய்வதற்காக புறப்பட்டுச் சென்ற இரண்டு பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தியதால், அவர்கள் பம்பை திரும்பினர். #SabarimalaProtest #WomenEntry
  திருவனந்தபுரம்:

  கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள பாரம்பரிய வழிபாட்டு முறைகளுக்கு மாறாக, அனைத்து வயதுடைய பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக ஐயப்ப பக்தர்களும் இந்து அமைப்பினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். எனினும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, பெண்களை சபரிமலைக்கு அழைத்துச் செல்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது.  இவ்வாறு பாதுகாப்புடன் செல்லும் பெண்களுக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர். இதனால் பல பெண்கள் தங்கள் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு திரும்ப நேர்ந்தது.

  இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ரேஷ்மா, ஷானிலா ஆகியோர் இன்று காலை பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த பக்தர்கள் அந்த பெண்களை முன்னேற விடாமல் நீலிமலையில் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். நேரம் செல்லச் செல்ல பக்தர்களின் கூட்டம் அதிகரித்து. இதனால், 2 பெண்களும் போலீஸ் பாதுகாப்புடன் பம்பை திரும்பினர். #SabarimalaProtest #WomenEntry
  குறைந்தபட்ச வரி விதிப்பு வேண்டும் என்றும், வரி விதிப்பில் பாரபட்சமின்றி செயல்பட கோரியும் ஆயிரக்கணக்கான தைவான் மக்கள் மஞ்சள் அங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். #Taiwan #YellowVest
  தைபே :

  பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை அரசு உயர்த்தியது மஞ்சள் அங்கி போராட்டம் என்ற மக்கள் போராட்டத்துக்கு வித்திட்டது. கார் டிரைவர்கள் தான் முதலில் இந்த போராட்டத்தை தொடங்கினர்.

  அதன்பிறகு மஞ்சள் அங்கி அணிந்த மக்கள் அவர்களுடன் கைகோர்த்ததும் போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. இந்த போராட்டத்தில் பயங்கர வன்முறை வெடித்தது. 10-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். ஒரு மாதத்துக்கு மேல் நடந்த இந்த போராட்டத்துக்கு அரசு பணிந்தது. வரி உயர்வை ரத்து செய்வதாக அறிவித்தது.

  இந்த நிலையில் பிரான்சை தொடர்ந்து தைவானும் மஞ்சள் புரட்சியில் இறங்கியுள்ளது. குறைந்தபட்ச வரி விதிப்பு வேண்டும் என்றும், வரி விதிப்பில் பாரபட்சமின்றி செயல்பட கோரியும் ஆயிரக்கணக்கான தைவான் மக்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். மஞ்சள் நிற உடைகளை அணிந்து, வரிவிதிப்பு கொள்கைகள் சட்ட ரீதியாக இல்லை என்ற பதாகைகளை ஏந்தி நிதி அமைச்சகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். #Taiwan #YellowVest
  சபரிமலைக்கு சென்ற இரண்டு இளம்பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதையடுத்து, அவர்களை திருப்பி அனுப்பும்படி அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். #SabarimalaTemple #SabarimalaProtest #Section144
  திருவனந்தபுரம்:

  கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் சம்பிரதாயத்தை மாற்றி, அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு வரும் இளம்பெண்களை தடுத்து நிறுத்துகின்றனர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் கேரள அரசு உறுதியாக உள்ளது.

  கடந்த மாதம் 16-ந்தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டபோதும் இளம்பெண்கள் கோவிலுக்கு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள், அரசியல் கட்சியினர், இந்து அமைப்புகள் போராட்டம் நடத்துவதால் நடை திறந்த முதல் நாளிலேயே சபரிமலையில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. அதன்பின்னர் அங்கு தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் இந்த தடை உத்தரவு டிசம்பர் 27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், சபரிமலை நோக்கி இரண்டு இளம்பெண்கள் இன்று காலையில் வந்துகொண்டிருந்தனர். அவர்களை அப்பச்சிமேடு பகுதியில் பக்தர்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கோவிலுக்கு செல்ல காவல்துறை அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.  இதையடுத்து தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், காவல்துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அப்பச்சமேடு பகுதியில் உள்ள நிலவரத்தை அமைச்சரிடம் அதிகாரிகள் எடுத்துக் கூறினர். இதையடுத்து, பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், தடுத்து நிறுத்தப்பட்ட 2 பெண்களையும் திருப்பு அனுப்பும்படி அமைச்சர் அறிவுறுத்தினார். எனவே, 2 பெண்களும் திருப்பி அனுப்பப்படுகிறார்கள். #SabarimalaTemple #SabarimalaProtest #Section144
  சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக வந்த பெண் சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் வெளியே வர முடியாதபடி கொச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டு ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். #TruptiDesai #Sabarimala
  திருவனந்தபுரம்:

  சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.

  சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு சபரிமலை கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனுக்களும் தாக்கல் செய்தனர்.

  இந்த மனுக்கள் மீது வருகிற ஜனவரி மாதம் 22-ந்தேதி விசாரணை நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. அதே நேரம் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு தொடரும் என்றும் கூறி விட்டது.

  சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வெளியான பின்பு 2 முறை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது கோவிலுக்கு வந்த பெண்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். அவர்களை 18-ம் படி ஏற அனுமதிக்கவில்லை.

  இந்த நிலையில் மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நாளை முதல் 41 நாட்கள் நடை திறந்திருக்கும். இந்த நாட்களில் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க சுமார் 800-க்கும் அதிகமான இளம்பெண்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்திருந்தனர்.

  இளம்பெண்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம், கோவிலின் ஆச்சாரத்தை மீற முயற்சிக்க வேண்டாம் என்று கோவில் தந்திரிகளும், ஐயப்ப பக்தர்களும் வேண்டுகோள் விடுத்தனர்.

  இதனை பெண்ணீய ஆர்வலர்கள் ஏற்க மறுத்தனர். மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திருப்திதேசாய், 6 இளம்பெண்களுடன் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசிக்கப்போவதாக அறிவித்தார்.

  அதன்படி, திருப்திதேசாயும், 6 இளம்பெண்களும் புனேவில் இருந்து கொச்சிக்கு விமானம் மூலம் வந்தனர். இன்று அதிகாலை 4.50 மணிக்கு அவர்கள் விமான நிலையம் வந்திறங்கினர். இந்த தகவல் ஐயப்ப பக்தர்களுக்கு தெரிய வந்தது. உடனே அவர்கள் விமான நிலையம் முன்பு திரண்டனர். அவர்கள் விமான நிலையத்தின் அனைத்து வாசல்கள் முன்பும் திரண்டு நின்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  திருப்திதேசாயையும், அவருடன் வந்த பெண்களையும் ஊருக்குள் அனுமதிக்க மாட்டோம். அவர்கள் விமானநிலையத்தில் இருந்து அப்படியே திரும்பிச் செல்ல வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர்.

  கொச்சி போலீசார் விரைந்து சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். திருப்திதேசாயை அருகில் உள்ள ஓட்டலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

  ஆனால் போராட்டக்காரர்கள் திருப்திதேசாயை திருப்பி அனுப்புவதில் குறியாக இருந்தனர். காலை 9 மணியளவில் போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ்., சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை எதிர்க்கும் பெண்கள் அமைப்பினர் என ஆயிரக்க ணக்கானோர் திரண்டனர். சிறை பிடிக்கப்பட்ட திருப்திதேசாய் புனேவிற்கு திரும்பிச் செல்லும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று போராட்டக்காரர்கள் கோ‌ஷமிட்டனர்.

  இதனால் கொச்சி விமான நிலையம் முன்பு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.  #TruptiDesai #Sabarimala

  சபரிமலை அருகே நிலக்கல், பம்பா பகுதிகளில் பத்திரிகையாளர்கள் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடியில் ஈடுபட்டு வருகின்றனர். #Sabarimalaverdict #SCverdict
  திருவனந்தபுரம்:

  சபரிமலைக்கு பெண்கள் வருவதை தடுக்க மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஐயப்ப பக்தர்கள் ஆவேசம் அடைந்தனர். சபரிமலை கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயிலான நிலக்கல்லில் குவிந்தனர். அங்கு சாலை மறியல், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  நேற்று மாலை தொடங்கிய போராட்டம் விடிய விடிய நடந்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

  சபரிமலை கோவில் நடை ஐப்பசி மாத பூஜைக்காக இன்று (புதன்கிழமை) மாலை திறக்கப்பட இருக்கிறது. அப்போது பெண் பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என்று கருதிய போராட்டக்காரர்கள், அவர்களை சபரிமலைக்குள் நுழைய விடாமல் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.  நிலக்கல்லில் இருந்து சபரிமலை செல்லும் அனைத்து வாகனங்களையும் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 10 வயதுக்கு மேல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இருந்தால் அவர்களை வலுக்கட்டாயமாக வாகனங்களில் இருந்து இறக்கி விட்டனர்.

  இன்று மாலை 5 மணியளவில் கோவில் திறக்கப்படவுள்ள நிலையில், அங்குள்ள நிலவரம் குறித்து செய்தி சேகரிப்பதற்காக ஏராளமான பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் நிலக்கல், பம்பை மற்றும் சபரிமலை கோவில் பகுதியில் குவிந்துள்ளனர்.

  இந்நிலையில், இன்று பிற்பகல் அவ்வழியாக ஒரு பெண் பத்திரிகையாளர் வந்த காரை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். அங்கிருந்து திரும்பிச் செல்லும்படி எச்சரித்ததுடன் அவர் வந்த காரின் மீதும் தாக்குதல் நடத்தினர்.

  நிலக்கல் பகுதியில் இந்தியா டுடே பத்திரைகையின் பெண் நிருபர் மவுசமி சிங் என்பவரும் போராட்டகாரர்களால் தாக்கப்பட்டார். அவரை மீட்ட போலீசார் பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.  இதேபோல் சில இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்ததால் நிலமையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதால் அங்கு பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது. #Sabarimalaverdict #SCverdict
  சபரிமலைக்கு செல்லும் பெண் பக்தர்களை தடுத்த போராட்டக்காரர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். நிலக்கல்லில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். #Sabarimala #SabarimalaTemple
  திருவனந்தபுரம்:

  சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 28-ந்தேதி உத்தரவிட்டது.

  சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு சபரிமலை கோவில் ஆச்சாரத்திற்கு எதிரானது என்றும், அந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யவேண்டும் என்றும் ஐயப்பப் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்க கேரள அரசு மறுத்து விட்டது.

  மாறாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளாவில் ஆளும் கட்சியாக உள்ள கம்யூனிஸ்டு அரசு அறிவித்தது. மேலும் சபரிமலைக்கு கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்தார்.

  கேரள அரசின் முடிவை கண்டித்து ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் குதித்தனர். சபரிமலை கோவில் தந்திரிகள், பந்தளம் ராஜகுடும்பம், ஐயப்ப சேவா சங்கம் உள்ளிட்டோர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

  கேரள மாநிலம் முழுவதும் நடந்த இப்போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஏராளமான பெண்களும் போராட்டத்தில் பங்கேற்றதால் மாநிலமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது.

  இதையடுத்து சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகம் இப்பிரச்சினை குறித்து நேற்று சமரச பேச்சுவார்த்தை நடத்தியது.

  பந்தளம் ராஜகுடும்ப பிரதிநிதிகள், தந்திரிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் அமைப்பினர் இதில் கலந்து கொண்டனர்.

  அவர்கள் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து தேவசம் போர்டும், கேரள அரசும் மறு ஆய்வு மனுதாக்கல் செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினர். இதை ஏற்க தேவசம் போர்டு மறுத்தது. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

  சபரிமலைக்கு பெண்கள் வருவதை தடுக்க மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஐயப்ப பக்தர்கள் ஆவேசம் அடைந்தனர். சபரிமலை கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயிலான நிலக்கல்லில் குவிந்தனர். அங்கு சாலை மறியல், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  நேற்று மாலை தொடங்கிய போராட்டம் விடிய விடிய நடந்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

  சபரிமலை கோவில் நடை ஐப்பசி மாத பூஜைக்காக இன்று (புதன்கிழமை) மாலை திறக்கப்பட இருக்கிறது. அப்போது பெண் பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள் என்று கருதிய போராட்டக்காரர்கள், அவர்களை சபரிமலைக்குள் நுழைய விடாமல் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

  நிலக்கல்லில் இருந்து சபரிமலை செல்லும் அனைத்து வாகனங்களையும் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 10 வயதுக்கு மேல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இருந்தால் அவர்களை வலுக்கட்டாயமாக வாகனங்களில் இருந்து இறக்கி விட்டனர்.

  சென்னையில் இருந்து பஞ்சவர்ணம் (வயது 40), என்ற பெண் அவரது கணவர் பழனி (45)யுடன் சபரிமலை செல்லும் பஸ்சில் இருந்தார். அவரை போராட்டக்காரர்கள் பஸ்சில் இருந்து கீழே இறக்கி அடித்து உதைத்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சென்னை தம்பதிகளை மீட்டு அழைத்து சென்றனர்.

  சென்னை தம்பதியை போல் சில பெண்கள் கருப்பு உடை அணிந்து அந்த வழியாக சென்றனர். அவர்களும் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து கோட்டயம் எஸ்.பி. ஹரிசங்கர் தலைமையில் அதிரடிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

  அவர்கள் சபரிமலை செல்லும் பக்தர்களை தடுத்த போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைத்தனர். நேற்று நள்ளிரவும், இன்று அதிகாலையிலும் தடியடி நடத்தப்பட்டது.  நிலக்கல்லில் நடந்த சம்பவம் பற்றி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அனுமதியின்றி போராட்டம் நடத்துவோரை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டனர்.

  அதன்படி, நிலக்கல்லில் போராட்டம் நடத்த போடப்பட்டிருந்த பந்தல் போலீசாரால் அகற்றப்பட் டது. மேலும் பெண் பக்தர்களை தடுத்த போராட்டக்காரர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கு 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். இதில், பெண் போலீசாரும் இருந்தனர்.

  சபரிமலை விவகாரம் குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு நேற்று நடத்திய சமரச பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து, தேவசம் போர்டின் கமிட்டி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  வருகிற 19-ந்தேதி இக்கூட்டம் நடக்க இருக்கிறது. அப்போது மீண்டும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் தெரிவித்தார். #Sabarimala #SabarimalaTemple