செய்திகள்

‘முத்தலாக்’ முறையை முடிவுக்கு கொண்டு வர சட்டம்: மத்திய அரசு முடிவு

Published On 2017-11-22 00:35 GMT   |   Update On 2017-11-22 00:35 GMT
‘முத்தலாக்’ முறையை முடிவுக்கு கொண்டு வர பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது புதிய சட்டம் இயற்றப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
புதுடெல்லி:

திருமணமான முஸ்லிம் ஆண் ஒருவர் தலாக், தலாக், தலாக் என 3 முறை கூறி தனது மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறை வழக்கத்தில் இருந்தது. இதற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடுத்தனர்.

அந்த வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ‘முத்தலாக்’ முறை அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கூறி, அதை செல்லாது என கடந்த ஆகஸ்டு மாதம் அறிவித்தது.

மேலும் ‘முத்தலாக்’ முறைக்கு 6 மாதம் தற்காலிக தடை விதித்த சுப்ரீம் கோர்ட்டு, இது தொடர்பாக மத்திய அரசு 6 மாதங்களுக்குள் சட்டம் இயற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. அப்படி சட்டம் இயற்றப்படாவிட்டால், ‘முத்தலாக்’ மீதான தடை மேலும் நீட்டிக்கப்படும் என நீதிபதிகள் கூறினர்.

ஆனாலும், இன்னும் ஆங்காங்கே இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையே ‘முத்தலாக்’ முறையை பின்பற்றி விவாகரத்து செய்தால், அது தண்டனைக்கு உரிய குற்றம் என்று ஆக்குகிற வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று கருதி இது குறித்து உரிய ஆலோசனை வழங்க அமைச்சக ரீதியிலான குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது.

இந்த நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது இது தொடர்பாக உரிய சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் அல்லது புதிய சட்டம் இயற்றப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. 
Tags:    

Similar News