செய்திகள்

சட்டவிரோதமாக பார்க்கிங் செய்த வாகனங்களை புகைப்படம் எடுப்பவர்களுக்கு சன்மானம் - நிதின் கட்காரி

Published On 2017-11-21 09:59 GMT   |   Update On 2017-11-21 10:00 GMT
சாலைகளில் சட்ட விரோதமாக பார்க்கிங் செய்த வாகனங்களை புகைப்படம் எடுத்து உரிய அதிகாரிகளுக்கு அனுப்புவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.
புதுடெல்லி:

சாலைகளில் சட்ட விரோதமாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்படுகிறது. வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்தாலும் மக்கள் அதனை மதிக்காமல் வாகனகளை நிறுத்துகின்றனர். இதனை தடுக்க புதிய விதிமுறையை செயல்படுத்தப்போவதாக போக்குவரத்து துறை மந்திரியான நிதின் கட்காரி கூறியுள்ளார்.



இதுகுறித்து அவர் கூறுகையில், 'என்னுடையை வாகனங்கள் சட்டத்தில் புதிய விதிமுறையை இணைக்க போகிறேன். அதன்படி சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை புகைப்படம் எடுத்து உரிய அதிகாரிகளுக்கோ அல்லது போலீசிற்கு அனுப்புவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவித்தார். அவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் அபராதத்திலிருந்து 10 சதவீதம் தன்மானமாக வழங்கப்படும்.

சாலை மக்கள் பயன்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. அதில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. பெரிய நிறுவனங்கள் தங்களுக்கு என தனி பார்க்கிங் வசதி வைத்திருக்க வேண்டும்.


பாராளுமன்றம் வளாகத்தில் பார்க்கிங் வசதி இல்லாதது எனக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியது. பல வெளிநாட்டு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வந்து செல்வர். அப்போது வாகனங்களை நிறுத்துவதில் நெரிசல் ஏற்படும். தற்சமயம் 9 கோடி ரூபாய் செலவில் புதிய பார்க்கிங் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான அனுமதி 9 மாதங்களுக்கு பிறகே கிடைத்தது' என கட்காரி கூறினார்.
Tags:    

Similar News