செய்திகள்

தீபிகா படுகோனேவை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக முதல்வர் கோரிக்கை

Published On 2017-11-21 01:47 GMT   |   Update On 2017-11-21 01:47 GMT
நடிகை தீபிகா படுகோனேவை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அரியானா முதல்-மந்திரிக்கு சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு:

‘பத்மாவதி’ இந்தி திரைப்படத்தில் நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்துள்ளார். அந்த படத்தில் ராஜபுத்ர சமூகத்தை சேர்ந்த 13-வது நூற்றாண்டின் சித்தூர்கர் ராணி பத்மாவதியின் வாழ்க்கை குறித்த கதை இடம் பெற்றுள்ளது. ராணியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அந்த படத்தில் காட்சிகள் அமைந்துள்ளதாக கூறி ராஜ்புத் சமூகத்தை சேர்ந்தவர்கள் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அந்த படத்தில் நடித்துள்ள நடிகை தீபிகா படுகோனேவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரியானா மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர், தீபிகா படுகோனேவின் தலைக்கு ரூ.10 கோடி பரிசை அறிவித்துள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து அரியானா மாநில முதல்-மந்திரி மனோகர்லால் கட்டாரிடம் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பேசினார். இதுகுறித்து சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-



‘பத்மாவதி’ இந்தி படத்தில் நடித்துள்ள நடிகை தீபிகா படுகோனேவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பா.ஜனதாவின் வெறுப்பு கலாசாரத்தை நான் கண்டிக்கிறேன். தீபிகா படுகோனே உலக அளவில் புகழ் பெற்ற நடிகை. அவருக்கு ஆதரவாக கர்நாடக அரசு நிற்கிறது. நான் அரியானா முதல்-மந்திரியிடம் பேசினேன்.

அவருக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளேன். தீபிகா படுகோனே கர்நாடகத்தை சேர்ந்தவர். அவர் கர்நாடகம் வரும்போது அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தேவையான பாதுகாப்பு வழங்கப்படும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

முன்னதாக மின்சாரத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் கூறுகையில், “நடிகை தீபிகா படுகோனேவின் தலைக்கு ரூ.10 கோடி பரிசு என்று அரியானா பா.ஜனதா நிர்வாகி ஒருவர் கூறி இருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது ஆகும். இது தான் பா.ஜனதாவின் கலாசாரமா?. ஒரு பிரபல விளையாட்டு வீரரின் மகளுக்கு பா.ஜனதா வழங்கும் மரியாதை இது தானா?. பெண்களுக்கு உரிய மரியாதையை கொடுங்கள்.

தீபிகா படுகோனேவுக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜனதா இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். அரசியல் சாசனம் கொடுத்துள்ள கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க இந்தியர்கள் குறிப்பாக பெண்கள், கலையுலகினர் அனைவரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்” என்றார்.

போலீஸ் மந்திரி ராமலிங்கரெட்டி கூறுகையில், “நடிகை தீபிகா படுகோனே கர்நாடகத்திற்கு வரும்போது உரிய பாதுகாப்பு வழங்கப்படும். அவருடைய குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்கப்படும்” என்றார்.
Tags:    

Similar News