செய்திகள்

கருப்பு பணம் பதுக்கிய இந்தியர்கள் பட்டியல்: சுவிஸ் வங்கி வழங்குகிறது

Published On 2017-11-20 08:34 GMT   |   Update On 2017-11-20 08:34 GMT
சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர், அவர்களின் வங்கி கணக்கு எண்கள், வங்கியில் உள்ள தொகை ஆகியவை பற்றிய விவரங்களை இந்திய அரசுக்கு சுவிஸ் அரசு வழங்குகிறது.
புதுடெல்லி:

கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சுவிட்சர்லாந்தில் உள்ள பல்வேறு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்கவும், அது பற்றிய தகவல்களை சேகரிக்கவும், அந்த நாட்டுடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

அதன்படி சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் பற்றிய விவரங்களை பகிர்ந்த கொள்ளும் வகையில் சுவிஸ் அரசுக்கும், இந்தியா உள்ளிட்ட 40 நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்துக்கு சுவிஸ் பாராளுமன்றத்தின் கீழவை கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளித்தது.
 

இந்த நிலையில் சுவிஸ் பாராளுமன்ற மேலவையின் பொருளாதார விவகாரங்கள் மற்றும் வரி விதிப்பு குழு இந்த ஒப்பந்தம் குறித்து விவாதித்தது. அப்போது இந்தியா உள்ளிட்ட நாடுகளுடனான ஒப்பந்தத்தை மேற் கொள்வதாகும். இந்த குழு ஒப்புதல் அளித்தது.

மேலும் இந்த ஒப்பந்தத்தில் தனி நபர் சட்ட பாதுகாப்பு வலுப்படுத்த வேண்டும் என்றும், அதற்கான திருத்தத்தை பாராளு மன்றத்தில் சுவிஸ் அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அந்த குழு வலியுறுத்தி உள்ளது.

இந்த ஒப்பந்தம் வருகிற 27-ந்தேதி தொடங்கும் சுவிஸ் நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது மேலவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலவை ஒப்புதல் அளித்த பிறகு அடுத்த ஆண்டு முதல் ஒப்பந்தம் நடை முறைக்கு வரும். இதையடுத்து இந்தியா- சுவிட்சர்லாந்து இடையே முதல் கட்ட விவரங்கள் 2019-ம் ஆண்டு பகிர்ந்து கொள்ளப்படும்.

இதன்படி சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர், அவர்களின் வங்கி கணக்கு எண்கள், முகவரி, பிறந்த தேதி, வங்கியில் உள்ள தொகை ஆகியவை பற்றிய விவரங்களை இந்திய அரசுக்கு சுவிஸ் அரசு அனுப்பிவைக்கும்.

இந்த விவரங்களை கொண்டு மத்திய அரசு விசாரணையை தொடங்கி சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்.
Tags:    

Similar News