செய்திகள்

பரோலில் வந்தபோது 622 சொத்துக்கள் மறு பத்திரப்பதிவு?: சசிகலா-இளவரசியிடம் விரைவில் விசாரணை

Published On 2017-11-16 06:43 GMT   |   Update On 2017-11-16 06:54 GMT
சசிகலா பரோலில் வந்திருந்தபோது 622 சொத்துக்கள் மறுபத்திரப்பதிவு செய்யப்பட்டதாக ஆவணங்கள் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளதால், சசிகலாவிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
பெங்களூரு:

சசிகலா உறவினர்கள் வீடுகளிலும், அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 9-ந்தேதி முதல் 13-ந் தேதிவரை 5 நாட்கள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.



சசிகலாவின் தம்பி திவாகரன், உறவினர்கள் டி.டி.வி.தினகரன், இளவரசியின் மகனும், ஜெயா டி.வி.யின் தலைமை செயல் அதிகாரியுமான விவேக், இளவரசியின் மகள்கள் கிருஷ்ணபிரியா, சகிலா மற்றும் உறவினர்கள் வீடு உள்பட மொத்தம் 187 இடங்களில் இந்த சோதனை நடந்தது. சென்னை மட்டும் அல்லாமல் திருச்சி, தஞ்சை, மன்னார்குடி உள்ளிட்ட நகரங்களில் உள்ள சசிகலா உறவினர் வீடுகளிலும் சோதனை நடந்தது.

ஜெயா டி.வி. அலுவலகம், மிடாஸ் மதுபான தொழிற்சாலை, ஜாஸ் சினிமாஸ் காம்ப்ளக்ஸ், கொடநாட்டில் உள்ள கர்சன் எஸ்டேட், கிரீன் டீ எஸ்டேட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

பெங்களூருவில் உள்ள கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணி செயலாளர் புகழேந்தி வீடு, கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணி அலுவலகம் ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

சோதனையின்போது நூற்றுக்கணக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆவணங்கள் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சசிகலா உறவினர்களுக்கு சம்மன் அனுப்பி கடந்த 3 நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் முதலில் இளவரசியின் மகன் விவேக், டாக்டர் சிவக்குமார், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் 3 பேர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.



நேற்று இளவரசியின் மகள்கள் கிருஷ்ணபிரியா, சகிலா, மருமகன்கள் ராஜராஜன், கார்த்திகேயன், ஜெயா டி.வி. பொதுமேலாளர் நடராஜன், கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணி செயலாளர் புகழேந்தி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்கள்.

தொடர்ந்து சென்னை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் சசிகலா உறவினர்கள் மற்றும் உறவினர்களின் அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணை முடிவடைய இன்னும் ஒருவாரம் முதல் 10 நாட்கள் வரை ஆகலாம்.

இந்த விசாரணை முடிந்ததும் அந்த தகவல்கள் அறிக்கையாக தயாரிக்கப்படும். பிறகு சென்னையில் உள்ள வருமான வரித்துறை தலைமை அலுவலகத்துக்கு விசாரணை அறிக்கையை திருச்சி மற்றும் கோவையில் உள்ள அதிகாரிகள் அனுப்பி வைப்பார்கள்.

அந்த அறிக்கைகளின் அடிப்படையில் சசிகலா குடும்பத்தினர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் இதுவரை நடந்துள்ள சோதனை மற்றும் விசாரணைகளில், ரூ.1500 கோடி கணக்கில் வராத வருமானம், பல நூறு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு, அந்த வரி ஏய்ப்புக்காக தொடங்கப்பட்ட போலி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பண பரிமாற்ற விவகாரங்களில் சசிகலாவுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. 5 நாள் சோதனையில் சிக்கிய பல சொத்து ஆவணங்களில், சசிகலா ஒரு பங்குதாரராக இருப்பதை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.

இது தவிர மன்னார்குடி குடும்பத்தினர் நடத்தும் பல்வேறு நிறுவனங்களிலும் சசிகலாவுக்கு தொடர்பு இருக்கிறது. எனவே அடுத்தக் கட்டமாக சசிகலாவையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டிய நிர்ப்பந்தம் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சமீபத்தில் நடந்த 622 சொத்துக்கள் மாற்றம்தான் சசிகலா மீதான பிடியை இறுகச் செய்துள்ளது. கடந்த மாதம் சசிகலா பெங்களூர் சிறையில் இருந்து 5 நாட்கள் பரோல் பெற்று, சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற தனது கணவர் நடராஜனை பார்க்க வந்தார்.

அப்போது அவர் தியாகராய நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ண பிரியா வீட்டில் தங்கியிருந்தார். அந்த சமயத்தில் சசிகலா தன் பெயரில் இருந்த 622 சொத்துக்களை மற்றவர்கள் பெயருக்கு மாற்றியதாக கூறப்படுகிறது. இதற்காக மறுபத்திரப்பதிவு நடத்தப்பட்டதாம்.

வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்கள் மூலம் சசிகலா சொத்துக்கள் மாற்றம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “நாங்கள் சோதனை நடத்திய பெரும்பாலான நிறுவனங்களுக்கும், பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கும் தொடர்பு உள்ளது. எனவே சசிகலாவிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். கோர்ட்டில் முறைப்படி அனுமதி பெற்று சசிகலாவை விசாரிக்க உள்ளோம்” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “இன்னும் 2 அல்லது 3 வாரங்களுக்குள் சசிகலாவிடம் விசாரணை நடத்தி முடிக்கப்படும்” என்றார்.

இதற்காக பரப்பன அக்ரஹார சிறை சூப்பிரண்டிற்கு வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டு ஒப்புதல் பெறப்படும்.

சிறை சூப்பிரண்டு ஒப்புதல் கொடுக்கும் நாளில் சென்னையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் நேரில் சென்று சசிகலாவிடம் விசாரணை நடத்துவார்கள். இந்த விசாரணையின் போது சசிகலா உறவினர்கள் குவித்த சொத்து விவரங்கள் பட்டியலை வைத்து சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் கேள்விகளை எழுப்பி பதில் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறையில் உள்ள இளவரசி, சுதாகரன் ஆகியோரிடமும் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் நடந்த சோதனையில் சிக்கிய ஆவணங்கள் மற்றும் நகை, பணம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அடுத்த கட்டமாக வங்கி லாக்கர்களை திறந்து ஆய்வு செய்ய உள்ளோம்.

சோதனையின் போது சிக்கிய ஆவணங்கள் குறித்து சசிகலா உறவினர்கள் மற்றும் அவர்களது அலுவலக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணை இன்னும் முடியவில்லை. இந்த விசாரணை முடிந்ததும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஒட்டுமொத்த குடும்பத்தினரின் அனைத்துவித வருவாய்க்கும் சசிகலா, இளவரசி ஆகியோர்தான் காரணம் என்று உறவினர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே அவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உள்ளோம்.

இதற்காக பெங்களூரு சிறை சூப்பிரண்டிற்கு அனுமதி கடிதம் அனுப்புவதற்கான பணிகள் தொடங்கி விட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News