செய்திகள்

பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் ரத்து - வேறு அறைக்கு மாற்றம்

Published On 2017-11-16 05:28 GMT   |   Update On 2017-11-16 06:07 GMT
பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வி.வி.ஐ.பி. கைதி வசதியில் இருந்து சாதாரண கைதிபோல சசிகலா நடத்தப்பட்டு வருகிறார்.
பெங்களூரு:

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.



கடந்த 10 மாதங்களாக அவர்கள் சிறையில் உள்ளனர். ஆரம்பத்தில் சசிகலா, இளவரசி ஆகியோருக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்பட்டது.

அவர்களுக்கு சொகுசு அறைகள் ஒதுக்கப்பட்டன. தூங்குவதற்கு வசதியாக தனி கட்டில்கள் வழங்கப்பட்டன. டி.வி. வசதியும் செய்யப்பட்டு இருந்தது. வக்கீல்கள் மற்றும் உறவினர்களை சந்திக்க சூப்பிரண்டு அறை அருகே தனி அறையும் சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது.

வெளியில் இருந்து உணவு மற்றும் மருந்து பொருட்களும் கொண்டுவர அனுமதிக்கப்பட்டது.

சசிகலா வைத்திருக்கும் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வெளியில் இருந்து மலர்களும் கொண்டுவர அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சசிகலாவும், இளவரசியும் ஜாலியாக ஷாப்பிங் சென்று வந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

சசிகலாவுக்கும், முத்திரைத்தாள் மோசடி மன்னன் தெல்கி ஆகியோருக்கும் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க சிறைத் துறை கூடுதல் டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் ரூ. 2 கோடி லஞ்சம் வாங்கியதாக சிறைத்துறை டிஐ.ஜி. ரூபா குற்றம் சாட்டி இருந்தார்.

இதையடுத்து சிறையில் விதிமுறை மீறல்கள் நடந்ததா? என்பது குறித்து வினய்குமார் தலைமையில் உயர்மட்டக்குழுவினர் விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டது. அந்த குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்தனர்.

சிறையில் சசிகலா, இளவரசி ஆகியோருக்கு சிறை விதிகளை மீறி சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மை தான் என்றும், அவர்களுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது என்றும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. சமையல் செய்ய சமையல் எரிவாயு, குக்கர் போன்ற வசதிகள் செய்யப்பட்டு இருந்ததும், பொழுதை கழிப்பதற்காக டி.வி. நிகழ்ச்சிகளை பார்க்க அனுமதிக்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

கட்சி நிர்வாகிகள் மற்றும் வக்கீல்களை சந்திக்க தனி அறை ஒதுக்கப்பட்டதும் தெரியவந்தது. வினய்குமார் விசாரணை நடத்தியபோதே சசிகலா, இளவரசி ஆகியோர் வேறு அறைக்கு மாற்றப்பட்டனர். தற்போது சசிகலா 2-வது மாடியில் உள்ள அறையில் இருந்து முதலாவது மாடிக்கு மாற்றப்பட்டு உள்ளார். அவருக்கு சமையல் செய்யும் வசதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுகளும் நிறுத்தப்பட்டது. ஜெயிலில் உள்ள உணவுகளையே சசிகலா சாப்பிடுகிறார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித உணவு கைதிகளுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி இட்லி, புளியோதரை, எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம், சப்பாத்தி உள்ளிட்ட உணவு வகைகள் வழங்கப்படுகின்றன. வாரத்தில் ஒரு நாள் அசைவ உணவு வழங்கப்படுகிறது.

சிறை வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரிலேயே சசிகலாவுக்கு டாக்டர் மருத்துவ பரிசோதனை செய்து மருந்து, மாத்திரை வழங்குகிறார். வெளியில் இருந்து மருந்து, மாத்திரைகள் கொண்டுவர அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. லிங்கத்துக்கு சிறை வளாகத்தில் உள்ள குடிநீர் குழாயில் இருந்து நீரை பிடித்து ஜலஅபிஷேகம் செய்கிறார்.

ஜெயலலிதா இதே சிறையில் இருந்தபோது துளசி மாடம் அமைக்கப்பட்டது. அந்த மாடத்தை சசிகலா சுற்றி வருகிறார்.

இதுவரை சசிகலா, இளவரசி ஆகியோர் வழக்கமான உடைகளையே அணிந்து வருகிறார்கள். விரைவில் அவர்களுக்கு வெள்ளை நிற சீருடை (பருத்தி ஆடைகள்) வழங்கப்பட உள்ளது.

மொத்தத்தில் வி.வி.ஐ.பி. கைதி வசதியில் இருந்து சாதாரண கைதிபோல சசிகலா நடத்தப்பட்டு வருகிறார்.

முன்பெல்லாம் சசிகலா பார்வையாளர்களையும், உறவினர்களையும் அடிக்கடி சந்தித்து வந்தார். தற்போது அவர் உறவினர்களை சந்திக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே உறவினர் மற்றும் அவருடன் செல்லும் 3 பேர் சசிகலா, இளவரசியை சந்திக்க அனுமதி வழங்கப்படுகிறது. வக்கீல்கள் மட்டும் அவர்கள் நினைத்த நேரத்தில் சசிகலா, இளவரசியை சந்திக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

சசிகலா, இளவரசி ஆகியோர் இருக்கும் அறை அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஏற்கனவே இயங்காமல் இருந்தன. தற்போது அவர்கள் அடைக்கப்பட்டு உள்ள அறை அருகே உள்ள கேமராக்கள் இயங்குகின்றன.

Tags:    

Similar News