செய்திகள்

மும்பை: கைக்குழந்தையுடன் இருந்த தாயை காருடன் இழுத்துச் சென்ற போலீஸ்காரர் பணி இடைநீக்கம்

Published On 2017-11-13 02:40 GMT   |   Update On 2017-11-13 02:40 GMT
மும்பையில் கைக்குழந்தையுடன் தாயை காருடன் போலீஸ்காரர் இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
மும்பை:

மும்பை மலாடு எஸ்.வி. சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. காரின் பின் இருக்கையில் பெண் ஒருவர் தனது 7 மாத கைக்குழந்தையுடன் அமர்ந்திருந்தார். அவரது கணவர் அருகில் உள்ள கடைக்கு சென்றிருந்தார். அப்போது, குழந்தை திடீரென பசியால் அழுதது. அதனால் குழந்தைக்கு காரில் இருந்தபடி தாய்ப்பால் கொடுத்து கொண்டு இருந்தார்.

அந்த கார் ‘நோ பார்க்கிங்’ பகுதியில் நின்று கொண்டு இருந்ததால், அதை கவனித்த போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் அங்கு வந்தார்.

‘நோ பார்க்கிங்’ பகுதியில் நின்று கொண்டு இருப்பதாக கூறி பச்சிளம் குழந்தையுடன் பெண் அமர்ந்து இருந்த காரை போலீஸ்காரர், ‘டோயிங்’ வேனுடன் இழுத்து சென்றார்.



இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டு இருப்பதாக கூறி கூச்சலிட்டார். மேலும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் இரக்கமின்றி நடந்துகொண்ட போக்குவரத்து போலீஸ்காரரை வார்த்தைகளால் வறுத்தெடுத்தனர்.

இதைத்தொடர்ந்து வேன் நிறுத்தப்பட்டு, அந்த பெண்ணும், குழந்தையும் கீழே இறக்கப்பட்டனர். பெண்ணின் கணவர் ‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை நிறுத்தியதற்காக அபராதம் செலுத்தியதை தொடர்ந்து பிரச்சினை முடிவுக்கு வந்தது.

இதனிடையே, போலீசாரின் இந்த அடாவடித்தன காட்சியை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். இதனால் பிரச்சினை பெரும் புயலை கிளப்பியது.



இதனை மிகவும் தீவிரமாக கருதிய இணை போலீஸ் கமிஷனர் (போக்குவரத்து) அமிதேஷ் குமார், தாயையும், குழந்தையும் அபாயகரமான நிலையில் காரில் இழுத்து சென்ற போக்குவரத்து போலீஸ்காரர் சாசங்க் ரானேயை அதிரடியாக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்த சம்பவத்திற்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் கண்டனம் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “இந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. இரக்கமற்றது. குழந்தை, பெண்ணை காருக்குள் வைத்து இழுத்து சென்றது மிகவும் ஆபத்தானது. இதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
Tags:    

Similar News