செய்திகள்

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஷாம்பூ-பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி குறைகிறது

Published On 2017-11-06 07:51 GMT   |   Update On 2017-11-06 07:51 GMT
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஷாம்பூ உள்ளிட்ட பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட உள்ளது. தற்போது இவற்றுக்கு 28 சதவீத வரி உள்ளது. அது 18 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:

கடந்த ஜூலை 1-ந்தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்த வருகிறது. பொருட்களுக்கு 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என 4 விதமாக வரி விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதம் இக்கவுன்சில் கூடி பொருட்களுக்கான வரி விகிதம் தேவைக்கு ஏற்ப குறைக்கப்பட்டு வருகிறது.

நவம்பர் மாதத்துக்கான கவுன்சில் கூட்டம் வருகிற 10-ந்தேதி மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தலைமையில் நடக்கிறது. அதில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரி விகிதம் குறைக்கப்படுகிறது.



அதன்படி கைகளால் தயாரிக்கப்படும் மேஜை, நாற்காலி உள்ளிட்ட மரசாமான்கள், பிளாஸ்டிக் பொருட்கள், மின்சார சுவிட்ச்சுகள், பிளாஸ்டிக் குழாய்கள், கழிவறை கோப்பைகள், கார், மோட்டார் சைக்கிள்களுக்கான சீட் மற்றும் கவர்கள், எடை பார்க்கும் எந்திரம், கம்ப்ர‌ஷர்களுக்கு ஜி.எஸ்.டி.வரி குறையும் என எதிர் பார்க்கப்படுகிறது.

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஷாம்பூ உள்ளிட்ட பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட உள்ளது. தற்போது இவற்றுக்கு 28 சதவீத வரி உள்ளது. அது 18 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மத்திய மந்திரி அருண்ஜெட்லியை சந்தித்து கைகளால் தயாரிக்கப்படும் பொருட்களுக்கான வரி விகிதத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று 28 சதவீதமாக உள்ள வரி 18 சதவீதமாக குறைக்கப்பட உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
Tags:    

Similar News