செய்திகள்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது? தலைமை தேர்தல் கமிஷனர் பதில்

Published On 2017-10-25 23:39 GMT   |   Update On 2017-10-25 23:39 GMT
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 31-ந்தேதிக்குள் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் ஏ.கே.ஜோதி தெரிவித்தார்.
புதுடெல்லி:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 31-ந்தேதிக்குள் நடத்தப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் ஏ.கே.ஜோதி தெரிவித்தார்.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருக்கிறது. இந்த தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது.

ஆனால் தொகுதியில் கோடிக்கணக்கான பணப்பட்டுவாடா நடைபெறுவதாக வந்த புகாரையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் அங்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்புகள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதற்கிடையே மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, ஆர்.கே.நகரில் டிசம்பர் 31-ந்தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.



கடந்த 12-ந்தேதி இமாசல பிரதேச தேர்தல் அறிவிப்பை வெளியிட்ட போது செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் கமிஷனர் ஏ.கே.ஜோதியும், டிசம்பர் 31-ந்தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்றார்.

இந்த நிலையில் குஜராத் மாநில தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. இந்த அறிவிப்பை வெளியிட்ட ஏ.கே.ஜோதியிடம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு ஏ.கே.ஜோதி பதிலளிக்கும் போது, ‘ஆர்.கே.நகர் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த அறிவிப்புகள் பின்னர் தனியாக வெளியிடப்படும். டிசம்பர் 31-ந் தேதிக்குள் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது அனைவருக்கும் தெரியும்’ என்று கூறினார்.

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த முடிவுகள் எப்போது வெளியாகும்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ‘இந்த விவகாரம் விசாரணையில் இருப்பதால் அது குறித்து தற்போது எதுவும் தெரிவிக்க முடியாது’ என்றார். 
Tags:    

Similar News